பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதே உண்மையான நல்லிணக்கத்தின் முதல் படியாக அமையும். என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் கையெழுத்து திரட்டப்பட்டு வருகின்றது.
இதன் ஓர் அங்கமாக நுவரெலியா, ரிகில்கஸ்கட பகுதியில் இன்று கையெழுத்து திரட்டப்பட்டது. இதில் பங்கேற்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் ஜீவன் தொண்டமான் கையொப்பம் இட்டார்.
அதன் பின்னர் நுவரெலியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ஜீவன் தொண்டமான்,
அரசியல் வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளது. இதற்கமையவே சாணக்கியன் விடுத்த அழைப்பை ஏற்று மனுவில் நானும் கையொப்பம் இட்டேன்.
இற்றைக்கு 43 ஆண்டுகளுக்கு முன்னர் தற்காலிக தீர்வாகவே பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் போர் முடிவடைந்து பல வருடங்கள் கடந்தும் அந்த சட்டம் நீடிக்கின்றது. இதனை ஏற்க முடியாது. உண்மையான ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தின் முதல்படியாக அச்சட்டத்தை நீக்க வெண்டும்.
இது தொடர்பில் நாம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை காங்கிரஸ் தற்போது எதிர்க்கவில்லை. முன்னர் இருந்தே எதிர்த்து வருகின்றோம். எமது மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் நீதிமன்றம்கூட சென்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.