சுதந்திரத்தின் பின்னர் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் நாட்டை வெளிநாடுகளின் அடிமையாக்கியுள்ளனர். இதன் காரணமாகவே இன்று கையேந்தி உண்ண வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாட்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை கொள்ளாத இந்த ஆட்சியாளர்களுக்கு மீண்டும் வாக்களித்து விட வேண்டாம் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
மேலும் , இலங்கை அரசாங்கம் அல்லது அரச நிறுவனங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களிடம் குறைகளை முன்வைப்பவர்களின் குடியுரிமையை 20 ஆண்டுகளுக்கு குறையாத காலப்பகுதிக்கு நீகுவதற்கான ஏற்பாது புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பேராயர் , இதனால் தாம் முழுமையான மௌனிக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நீர்கொழும்பு பிரதேசத்தில் வியாழக்கிழமை (03) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
எம்மை ஆட்சி செய்கின்ற, எமது வாக்குகளால் தெரிவு செய்யப்படும் தலைவர்கள் ஏன் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை காண்பிக்காமலுள்ளனர்? இதற்கான காரணம் என்பது தொடர்பில் எம்மால் புரிந்து கொள்ள முடியாமலுள்ளது. தாம் தெரிவு செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்த வாக்குகளை வழங்கிய மக்களின் தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமல்லவா?
தற்போது தேர்தல் முறைமையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்கு முன்னர் காணப்பட்ட தேர்தல் முறைமையில் தொகுதி முறைமை காணப்பட்டது. இந்த முறைமையின் கீழ் நாம் தெரிவு செய்யும் எந்தவொரு உறுப்பினரானாலும் , அவர் அவரது தொகுதியிலுள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்துவார். ஆனால் தற்போது அவ்வாறொன்று இல்லை. வாக்குகளைப் பெறுவதற்காக முழு மாவட்டத்திற்கும் செல்ல வேண்டியுள்ளது.
இவ்வாறு வாக்குகளைப் பெறுவதற்கு கோடிக்கணக்கான பணத்தை செலவிட வேண்டும் என்பதால் , அவர்கள் மோசடியாளர்களுடன் இணைந்து அதற்காக வேலைத்திட்டங்களை முன்னெடுப்பார்கள். இறுதியில் வாக்களித்த மக்கள் தமது உரிமைகள் தொடர்பில் குரலெழுப்பும் போது அவர்களை துரத்தியடிப்பார்கள். 1978 ஆம் ஆண்டின் பின்னர் நாட்டுக்கு ஏற்பட்ட பாரிய அழிவு இதுவேயாகும்.
எமது நாட்டின் தலைவர்கள் எனக் கூறப்படுபவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளனர். பல வருடங்களாக எமது நாட்டை வெளிநாடுகளின் அடிமையாக்கியுள்ளனர். இதன் காரணமாகவே தற்போது ஏனைய நாடுகளிடம் கையேந்தி உண்ண வேண்டிய நிலைமை எமக்கு ஏற்பட்டுள்ளது.
இன்று எமது நாட்டில் வீடுகள் இன்றி எத்தனை குடும்பங்கள் உள்ளன? கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரே தற்போது இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சாகவும் உள்ளார். டொலரைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட அதிசொகுசு அடுக்குமாடி குடியிருப்புக்கள் மூன்றை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவா நகர அபிவிருத்தி அமைச்சு என்ற ஒன்று காணப்படுகிறது? சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து , அவர்கள் முன் தலை குனிந்து இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலைமை என்ன? மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க முடியாத ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும். மீண்டும் இவர்களுக்கு வாக்களித்து விட வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
மாறாக இவர்களுக்கு வாக்களித்து விட்டு , பின்னர் என்னிடம் வந்து வீடமைத்து தருமாறு கோர வேண்டாம். ஜனாதிபதியினால் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. எனினும் அந்தக் குழு அரசியலமைப்பின் உள்ளடக்கம் தொடர்பில் யாரிடமும் சென்று எந்தவொரு நிலைப்பாட்டையும் பெறவில்லை. மாறாக அவர்களுக்குள்ளேயே கலந்துரையாடி பிரதியொன்றை தயாரித்து அதனை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
அதன் பிரதியொன்று எனக்கும் கிடைக்கப் பெற்றது. அதிலுள்ளவற்றை நடைமுறைப்படுத்தினால் அது நாட்டுக்கு சாபக்கேடாகும். ஒழுக்கமற்றவொரு அரசியமைப்பினையே தயாரித்துள்ளனர்.
எவரேனும் அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது அரச நிறுவனத்திற்கு எதிராகவோ , ஐக்கிய நாடுகள் சபை , வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு தலைவர்களிடம் குறைகளைக் கூறினால், குறித்த நபரின் குடியுரிமையை 20 ஆண்டுகளுக்கு குறையாத காலப்பகுதிக்கு தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசியலமைப்பில் உள்ளடக்கியுள்ளனர். கல்வி கற்றவர்கள் என்று கூறப்படுபவர்கள் இதனையே செய்துள்ளனர். எம்மை முழுமையாக மௌனிக்கச் செய்துள்ளனர். இதுவே எமது நாட்டுக்கு இடம்பெற்றுள்ள நிலைமையாகும் என்றார்.