புதிய அரசியலமைப்பு தயாரிப்புக்காக சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ நியமித்த விசேட குழு புதிய அரசியலமைப்புக்கான சட்டமூலம் தயாரிக்கும் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கான சட்டமூலம் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வருட இறுதிக்குள் அது அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்படும் வாய்ப்பு காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதனை நாட்டில் நடைமுறைப்படுத்தப் போவதாக சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு தெளிவாக கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பானது ஜே.ஆர். ஜயவர்தன ஜனாதிபதியின் யுகத்தில் 1978 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகும்.
கடந்த நான்கரை தசாப்தங்களாக நாட்டு மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். அதற்கிணங்க புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ, சட்டத்தரணிகள் மற்றும் கல்விமான்களைக் கொண்ட விசேட குழுவை நியமித்தார்.
அந்த குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா செயற்படுவதுடன் அந்தக் குழு தற்போது அரசியலமைப்புக்கான சட்டமூலத்தை தயாரிக்கும் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளது.
அந்த சட்ட மூலம் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு இறுதி ஆவணம் தயாரிக்கப்படவுள்ளது.
இந்த வருட இறுதிக்குள் அது அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022 ஜனவரி மாதத்தில் புதிய அரசியலமைப்பை கவனத்திற் கொள்ள வேண்டிய வாய்ப்பு நாடாளுமன்றத்திற்கு கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.