அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் நிறைவேற்றதிகாரத்துக்கு மிதமிஞ்சிய அதிகாரங்களை வழங்குவதுடன் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பொறுப்புக்கூறலை உறுதிசெய்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், பயங்கரவாதத்தை இல்லாதொழித்தல் என்ற பெயரில் நபர்களை முறையற்ற விதத்தில் நடத்தும் கலாசாரத்தை மாற்றுவதற்கான வலுவான அரசியல் நிலைப்பாடின்றி, வெறுமனே சட்டமறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரம் எதனையும் சாதிக்கமுடியாது என்று தெரிவித்துள்ளது.
இதுபற்றி அந்நிலையம் மேலும் கூறியிருப்பதாவது:
பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அவசரகாலநிலை பிரகடனம் ஆகியவற்றின் மூலமான அதிகாரங்களைக் கடந்தகால அரசாங்கங்கள் பயன்படுத்திய விதத்தை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலம் நிறைவேற்றதிகாரத்துக்கு மிதமிஞ்சிய அதிகாரங்களை வழங்குவதுடன் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பொறுப்புக்கூறலை உறுதிசெய்கின்றது.
சிறுபான்மையினத்தவர், விமர்சகர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களை இலக்குவைப்பதற்கும் சித்திரவதைகள் மற்றும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கங்களால் பாதுகாப்புச்சட்டங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் பின்னணியில், இச்சட்டமூலம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படவேண்டியது அவசியமாகும்.
அதேவேளை பயங்கரவாதத்தை இல்லாதொழித்தல் என்ற பெயரில் நபர்களை முறையற்ற விதத்தில் நடத்தும் கலாசாரத்தை மாற்றுவதற்கான வலுவான அரசியல் நிலைப்பாடின்றி, வெறுமனே சட்டமறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரம் எதனையும் சாதிக்கமுடியாது என்பதை மீளவலியுறுத்துகின்றோம்.
மேலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள சட்டமூலமானது பெருமளவிற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டு, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாத பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை ஒத்ததாகக் காணப்படுகின்றது.
இருப்பினும் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டிருக்காத பல்வேறு குற்றங்கள் இப்புதிய சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டிருப்பதுடன், அவற்றில் சில விடயங்கள் கருத்துவெளிப்பாட்டுச்சுதந்திரம் தொடர்பில் தீவிர கரிசனையைத் தோற்றுவித்திருக்கின்றன.
இருப்பினும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் பொலிஸ் அதிகாரியொருவரின் முன்னிலையில் வழங்கும் வாக்குமூலம் ஆதாரமாகக் கருதப்படமாட்டாது என்பது மாத்திரமே ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்துடன் ஒப்பிடுகையில் இப்புதிய சட்டமூலத்திலுள்ள ஒரேயோரு முன்னேற்றகரமான மாற்றமாகும்.
ஆனால் தடுப்புக்காவல் உத்தரவு தொடர்பான தீவிர கரிசனை இன்னமும் தொடர்கின்றது. குறிப்பாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் பாதுகாப்பு அமைச்சரிடம் காணப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவு வழங்கும் அதிகாரம், இப்புதிய சட்டமூலத்தில் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இதனூடாக வரையறுக்கப்பட்டுள்ள தடுப்புக்காவலில் வைப்பதற்கான காலப்பகுதி மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய நிபந்தனைகளும் கரிசனைக்குரியவையாகவே காணப்படுகின்றன.
அத்தோடு இச்சட்டமூலத்தின் ஊடாக அமைப்புக்களுக்கு எதிராகத் தடையுத்தரவு விதிப்பதற்கான அதிகாரமும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்வதிகாரங்கள், நாட்டில் நிலவும் சட்டபூர்வமான கருத்துவெளிப்பாட்டுச்சுதந்திரத்தை முடக்குவதற்குப் பயன்படுத்தப்படக்கூடும் என்ற சந்தேகம் நிலவுகின்றது.
மேலும் இப்புதிய சட்டமூலத்தில் ‘பயங்கரவாதக்குற்றங்களுக்கு’ வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணம் மிகவும் பரந்துபட்டதாகக் காணப்படுவதுடன், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் இலங்கையின் நீண்டகால ஒடுக்குமுறை வரலாற்றை நினைவூட்டுகின்றது.
இலங்கையானது மீட்சியையும், அபிவிருத்தியையும் நோக்கிப் பயணிக்கும் தற்போதைய சூழ்நிலையில், மீறல்கள் மற்றும் தண்டனைகளிலிருந்து விடுபடுதல் போன்றவற்றை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் ஏற்றவாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்தியுள்ளது.