விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம், பணம் வழங்கியது யார் என்பதை நாங்கள் தெரிவிக்க தேவையில்லை. அதனை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்டு அறிந்துகொள்ளங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) விசேட கூற்றொன்றை முன்வைத்து, நாடு வங்குராேத்து அடைந்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷ் உள்ளிட்ட அரச தரப்பு உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துக்கு சொந்தமான கப்பல்களை பயன்படுத்திக்கொண்டு நடுக்கடலில் விருந்துபசாரம் மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதன்போது அதற்கு பதிலளித்த ஆளும் கட்சி பிரதமகொறடா தெரிவிக்கையில், புள்ளி போட்டுக்கொள்வதற்காக அவசியமற்ற கேள்விகளை கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். அவ்வாறு கேள்வி கேட்கவேண்டும் என்றால், பிரத்தியேகமாக கேள்வி கேட்டால் சம்பந்தப்பட்ட அமைச்சர் அதற்கு பதில் வழங்குவார் என்றார்.
அதற்கு சஜித் பிரேமதாச தெரிவிக்கையில், நான் மக்களுக்காகவே இந்த விடயத்தை முன்வைத்தேன். எனது தனிப்பட்ட எந்த விடயத்தையும் முன்வைக்கவில்லை. அதனால் மக்களின் பணத்தில் நடு்க்கடலில் விருந்துபசாரம் நடத்தியமை தொடர்பில் அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என்றார்.
அதற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதிலளிக்கையில், முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் எமக்கும் கருத்து தெரிவிக்க முடியும். உங்கள் சகோதரி திருட்டு பணம் மாற்றியபோது, அந்த சம்பவத்தில் இருந்து அவரை பாதுகாத்தது, மஹிந்த ராஜபக்ஷ் என்பதை மறந்துலிட வேண்டாம்.அது பொருளாதாரத்துக்கு பாதிப்பான விடயம்.
அதேபோன்று உங்கள் தந்தைதான் புலிகளுக்கு ஆயுதம் வழங்கி இருந்தார். இதுபோன்று எங்களுக்கும் தெரிவிக்க முடியும் என்றார்.
அதற்கு சஜித் பிரேமதாச பதிலளிக்கையில், புலிகளுக்கு பணம் வழங்கியது யார் என்பது தொடர்பில் பொது மக்கள பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். யார் பணம் வழங்கியது. யாருடைய பணத்தை வழங்கியது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
அத்துடக் நானோ எனது குடும்பத்தில் வேறுயாரும் திருட்டுப்பணம் மாற்றியதில்லை. இவ்வாறு பொய் பிரசாரம் மேற்கொள்ள வேண்டாம். அதனை நான் பொறுப்புடனே தெரிவிக்கிறேன், அதனால் துறைமுகத்துக்கு சொந்தமான கப்பலை பயன்படுத்திக்கொண்டு எவ்வாறு விருந்துபசாரம் நடத்த முடியும் என்பது தொடர்பில் பதிவளிக்க வேண்டும் என்றார். என்றாலும் இதுதொடர்பில் பதிலளிக்கவில்லை.