பெருந்தோட்ட வீடுகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்குமாறு நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்ட ரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்கக் கோரி நுவரெலியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ 6) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 1987ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்ட 37,000 பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்ட ரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்குமாறு வலியுறுத்தி, கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தினரும், சில சிவில் அமைப்புகளும் இணைந்து நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இதன்போது ‘எமக்கு வேண்டும் தனி வீடுகள்’, ‘37000 வீடுகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்கு’, ‘தோட்டத் தொழிலாளர் இந்த நாட்டின் பிரஜைகள்; அவர்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும்’, ‘எமது நில உரிமையை உடனடியாக பெற்றுத் தாருங்கள்’, ‘பழமையான வீட்டு வாழ்க்கை போதும்’ போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், 1987ஆம் ஆண்டின் பின்னர் பெருந்தோட்டங்களில் கட்டப்பட்ட வீடுகளுக்கு வீட்டுரிமைப் பத்திரங்களை வழங்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான மகஜரொன்றில் கையொப்பங்களை திரட்டுவதற்கான நடவடிக்கைகளும், நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடம், அஞ்சல் அலுவலகத்துக்கும் முன்பாக மேற்கொள்ளப்பட்டது.