ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கத்தை உருவாக்க கடுமையாக உழைத்த உறுப்பினர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாவிடின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் நீடிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இதுவரை வழங்கப்படாத அமைச்சரவை அமைச்சர் பதவிகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான பின்னணியில் அண்மையில் ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்திருந்தனர்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவின் நடத்தையை கடுமையாக விமர்சித்ததுடன், தமது கட்சித் தலைவர் அரச தலைவர் என்பதாலேயே அவரது செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
ஜனாதிபதியை ஓரங்கட்டும் எண்ணம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இல்லை என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கைவிட முயற்சித்தால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என எச்சரித்துள்ளார்.