நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் நல்லிணக்க செயற்பாட்டில் முன்னேற்றகரமான நகர்வு என்பன குறித்து இலங்கை மற்றும் பிரிட்டனின் உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவுக்கும் பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் நிரந்தர வெளியுறவுச் செயலாளர் பிலிப் பார்றனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்கிழமை (17) வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.
பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது வருட பூர்த்தியில் இச்சந்திப்பு இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
இச்சந்திப்பின்போது நாட்டின் தற்போதைய நிலைவரம் மற்றும் 2023இல் சமூக – பொருளாதார உறுதிப்பாடு, நல்லிணக்கம் மற்றும் மீட்சி ஆகியவற்றை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் என்பன குறித்து வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன பிலிப் பார்றனுக்கு விளக்கமளித்தார்.
இலங்கையின் முயற்சிகளை ஊக்குவித்த பார்றன், இவ்விடயத்தில் இலங்கைக்கு பிரிட்டன் தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
தற்போது பொருளாதார மீட்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இலங்கை விசேட அவதானம் செலுத்தியிருக்கிறது.
இந்நிலையில், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் கீழ் பிரிட்டனுடன் இலங்கை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பொருளாதார ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து பிரஸ்தாபித்த அருணி விஜேவர்தன, அதன் மூலம் பிரிட்டன் சந்தைக்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்பு இலகுவாக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் திறன் வாய்ந்த தொழிலாளர் குடிப்பெயர்வு ஆகியவற்றில் பிரிட்டனின் ஒத்துழைப்பு வலுவடைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான இயலுமை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் காலநிலை மாற்ற சவால்களுக்கான துலங்கல்கள், 2030ஆம் ஆண்டில் 70 சதவீத புதுப்பிக்கத்தக்க சக்திவலு உற்பத்தியை அடைதல் என்ற இலங்கையில் இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகள் என்பன பற்றியும் ஆராயப்பட்டது.
மேலும், இரு நாடுகளினதும் அக்கறைக்குரிய விடயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தல் மற்றும் செயற்றிறன் மிக்க வெளியீட்டை பெறல் ஆகியவற்றை முன்னிறுத்தி, இவ்வருடத்தின் முதற்காலாண்டில் இலங்கைக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுப்பது குறித்து இரு தரப்பினரும் பரஸ்பரம் தமது விருப்பத்தை வெளியிட்டனர்.