புனர்வாழ்வு பணியகச் சட்டமூலத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – நீதி அமைச்சர்

புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்களை முறையாக செயற்படுத்தியுள்ளோம்.

புனர்வாழ்வு பணியக சட்டம் இயற்றப்பட்டால் சுய விருப்பத்தின் அடிப்படையில் புனருத்தாபன நடவடிக்கையில் ஈடப்பட முடியும். ஆகவே நாட்டின் தற்போதைய நிலையை அறிந்து அனைத்து தரப்பினரும் இந்த சட்டமூலத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (18) புதன்கிழமை இடம்பெற்ற புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

புனர்வாழ்வளித்தல் செயலணி ஒன்றை ஸ்தாபிக்கும் வகையில் புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ளோம். இந்த சட்டமூலத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்புக்கள் தோற்றுவிக்கப்பட்டன. எதிர்ப்புகள் எதிர்பார்க்கப்பட்டதே, அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இருப்பினும் அரசியலமைப்பு 21 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டு இருமாதங்கள் நிறைவுப் பெற்றுள்ள நிலையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானது என்பதை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

புனர்வாழ்வு பணியக சட்டமூலம்  விரைவாக இயற்றப்பட்டதல்ல  முன்னாள் நீதியமைச்சர் அலிசப்ரியின் வழிகாட்டலுக்கு அமைய துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் நியமித்த குழுவினர் சமர்ப்பித்த அறிக்கைக்கு அமைய சட்டமூலம் தயாரிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டமூலத்தை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

விடுதலைபுலிகள் அமைப்பின் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்தல் பணிகள் சட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்படவில்லை. 2005 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது. தவறான ஆலோசனைக்கு அமைய போராட்டத்தில் ஈடுப்படுபவர்கள்,போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு அக்காலக்கட்டத்தில் புனர்வாழ்வு வழங்கப்பட்டது,இந்த நடவடிக்கையை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தும் வகையில் புனர்வாழ்வு பணியக சட்டமூல வரைபு தயாரிக்கப்பட்டது.

நாட்டில் கடந்த வருடம் போராட்டம் தோற்றம் பெற்றது. போராட்டத்தில்  ஈடுப்பட்டவர்களை அடக்கும் வகையில் புனர்வாழ்வு பணியக சட்டமூலம்  உருவாக்கப்பட்டுள்ளது என ஒரு தரப்பினர் முன்னெடுத்த தவறான பிரசாரத்தினால் ஒரு தரப்பினர் புனர்வாழ்வு பணியக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். புனர்வாழ்வு பணியக சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை முறையாக செயற்படுத்தியுள்ளோம்.

2017 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு அமைய போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல் காரியாலம், சிறைச்சாலை திணைக்களம் மற்றும் தனியார் புனர்வாழ்வளித்தல் நிலையங்கள் ஊடான புனர்வாழ்வளிக்கப்படுகிறது.

கந்தகாடு, சேனபுர மற்றும் வவுனியா ஆகிய புனர்வாழ்வு மத்திய நிலையங்களில் 493 பேர் புனர்வாழ்வு சிகிச்சை பெறுகிறார்கள். சிறைச்சாலை திணைக்கத்தின் ஊடாக 10 புனர்வாழ்வு நிலையங்களில் சிகிச்சை வழங்கப்படுகிறது. சிறைச்சாலைகளில் புனர்வாழ்வளித்தல் சிக்கல் சிறைந்ததாக உள்ளது.

நீதிமன்றத்தின் அனுமதியுடன் தான் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் இளம் தலைமுறையினர் போதைப்பொருள் பாவனைக்கு சடுதியாக அடிமையாகியுள்ளார்கள். நீதிமன்ற நடவடிக்கை ஊடாக தமது பிள்ளை புனர்வாழ்வு சிகிச்சைக்கு உள்வாங்கப்படுவதை பெரும்பாலானோர் விரும்புவதில்லை.

புனர்வாழ்வு பணியக சட்டம் இயற்றப்பட்டால் சுய விருப்பத்தின் அடிப்படையில் புனருத்தாபன நடவடிக்கையில் ஈடப்பட முடியும். ஆகவே நாட்டின் தற்போதைய நிலையை அறிந்து அனைத்து தரப்பினரும் இந்த சட்டமூலத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.