பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துவதற்கான நியாயமான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், அதற்குப் பதிலாக உருவாக்கப்படும் எந்தவொரு புதிய சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு உட்பட்டவையாக அமையவேண்டியது அவசியமாகும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
மிக மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் கடந்த ஜூலை மாதம் ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டதிலிருந்து அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதுடன் போராட்டத்தை ஒருங்கிணைப்பவர்கள் இலக்குவைக்கப்பட்டு வருகின்றார்கள். அதுமாத்திரமன்றி மாணவ செயற்பாட்டாளர்களை தடுத்துவைப்பதற்கு பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.
குறிப்பாக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கல்வௌ சிறிதம்ம தேரர் ஆகிய இருவரும் 90 நாட்களுக்கும் அதிகமான காலம் எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை தொடர்ந்து தடுத்துவைக்குமாறு கடந்த வியாழக்கிழமை (நவ 17) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனையடுத்து அவ்விரு மாணவர்களையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி நேற்று வெள்ளிக்கிழமை (நவ 18) கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 1979ஆம் ஆண்டு ஒரு தற்காலிக நடைமுறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டமானது அப்போதிருந்து நபர்களை நீண்டகாலம் தன்னிச்சையாக தடுத்துவைப்பதற்கும் சித்திரவதைகளுக்கு உட்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அச்சட்டத்தின் பிரயோகத்தினால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்களாகவோ அல்லது அரசாங்கத்தை விமர்சிப்பவர்களாகவோ இருக்கின்றார்கள்.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமராக பதவி வகித்தபோது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதாக வாக்குறுதியளித்த ரணில் விக்ரமசிங்க, இப்போது ஜனாதிபதி என்ற ரீதியில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மாணவர்கள் இருவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைப்பதற்கு உத்தரவிட்டிருக்கின்றார்.
எனவே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துவதற்கான நியாயமான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தும் அதேவேளை, அதற்குப் பதிலாக உருவாக்கப்படும் எந்தவொரு புதிய சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு உட்பட்டவையாக அமையவேண்டியது அவசியமாகும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.