பொருளாதார நெருக்கடிக்கு இனப் பிரச்சினையே முக்கிய காரணம்- ரெலோ செயலாளர் நாயகம் ஜனா எம்.பி

தெற்கு அரசியலின் பலப் பரீட்சைக்காக உள்ளூராட்சி சபை தேர்தல் கோரப்படுகிறது. அதனை விடுத்து தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அடிப்படை புள்ளியான மாகாண சபை தேர்தலை முதலில் நடத்துவதற்கு கவனம் செலுத்த வேண்டும். அடுத்த சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பலரும் தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்கது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (நவ 19) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இனப் பிரச்சினை தீர்வு

இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் சிறந்த சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.

நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினை தீர்க்கப்பட்டது என்பதை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தையும் எதிர்க்கட்சியின் இணக்கப்பாட்டையும் பெற்றுக்கொள்ளக்கூடிய திறமை கொண்டவர் நீங்கள்.

அவ்வாறு செயல்பட்டால் அதற்கு எமது முழுமையான ஒத்துழைப்பையும் வழங்க முடியும். தமிழர்கள் சந்தர்ப்பத்துக்கேற்ப சிந்திப்பவர்கள் அல்ல. எப்போதும் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப சிந்திப்பவர்கள் சிங்கள அரசியல்வாதிகளே. தமிழர்கள் சமஷ்டி தொடர்பில் எண்ணத்தை வெளியிட முன்பே அது தொடர்பில் தெரிவித்தவர் மறைந்த முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க. 13ஆவது அரசியல் திருத்தத்தை நாம் கோரவில்லை. எனினும், 13 ப்ளஸ் வழங்க முடியும் என ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி, சமூக பாதுகாப்பு, திறந்த பொருளாதார முறை தொடர்பில் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

சமூக பாதுகாப்பு என்பது என்ன?

இன்றும் கூட ஜனநாயகத்துக்கு எதிராக நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு என கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் இப்போது 40 வருடங்களுக்கு மேலாக தொடர்கிறது. இந்த பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் தேவைதானா என்பதை உங்கள் சமூக பாதுகாப்பு என்பதன் அடிப்படையில் நான் கேட்க விரும்புகின்றேன். தேசிய பிரச்சினை தீர்வுக்காக எந்த அரசாவது முயற்சிகளை மேற்கொண்டால், உடனடியாக அப்போதுள்ள எதிர்க்கட்சி அதற்கு எதிராக கோஷங்களை எழுப்பும். இதுதான் வரலாறு. அடுத்த சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பலரும் தெரிவித்து, ஒரே நேர்கோட்டில் உள்ளமை வரவேற்கத்தக்கது. இந்த சந்தர்ப்பம் சரியாக பயன்படுத்தப்பட்டால், எமது அடுத்த வரவு செலவுத் திட்டம் இந்த நாட்டுக்கான சுபிட்சம் மிகுந்த வரவு செலவுத் திட்டமாக அமையும்.

இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு இனப் பிரச்சினையே முக்கிய காரணம். ஆணிவேரை விடுத்து பக்கவேரில் செயல்பட முற்படாதீர்கள். எமது மக்கள் எத்தகைய தியாகங்களுக்கும் தயார். ஆனால், நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் அனைவருக்கும் சமமாக பகிரப்பட வேண்டும். இன, மத, மொழி ரீதியாக அன்றி சமமான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இவை எப்போதோ நடந்திருந்தால் எமது நாடு உண்மையில் ஆசியாவின் ஆச்சரியமாக திகழ்ந்திருக்கும். உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். தேர்தல்களில் வெற்றி பெறுவோமா – தோல்வியடைவோமா என்று சந்தேகம் கொள்பவர்களால் ஜனநாயகம் நசுக்கப்படக்கூடாது.

நாட்டில் கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்னும் நடத்தப்படவில்லை.அது விடயத்தில் ஜனாதிபதி உரிய கவனம் செலுத்த வேண்டும். இனப் பிரச்சினைக்கான முதல் அடிப்படை புள்ளியாக கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமை கணக்கில் எடுக்கப்படாமல், தற்போது மாகாண சபை தேர்தல் தொடர்ந்தும் ஒத்திப்போடப்பட்டு வருகின்றது.

எதிர்க்கட்சிகள் அனைவரும் சேர்ந்து உள்ளூராட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் வரை சென்றுள்ளார்கள். உள்ளூராட்சி சபை தேர்தல் தெற்கில் நடத்தப்படும் பலப் பரீட்சையாகவே அமையும். அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தலின் நிலையை கண்டுகொள்வதற்காகவே இப்போது உள்ளூராட்சி சபை தேர்தலை கோருகின்றனர். வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு நான்கு வருடமும், கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு ஐந்து வருடமும் கடந்துபோயுள்ளன. இந்நிலையில் மாகாண சபை தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டும். தற்போதைய எமது ஜனாதிபதி ஒரு ஜனநாயக கனவானாக இருந்தால், அவர் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு முன்பே மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.