மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்க உதவுமாறு மாகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவையும் மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களையும்  குறைத்து, சமூகத்தில் நிலவும் அமைதியின்மையை சீர்செய்ய கொள்கை ரீதியான உரிய பொறிமுறையை தயாரிக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

மகாநாயக்க தேரர்கள் கூட்டாக இந்த விடயத்தை வலியுறுத்தும் வகையில், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வறக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன், ஜனாதிபதிக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதிகரித்துள்ள பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொண்டு, அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவை குறைத்து மக்கள் வாழ்க்கையை பாதுகாப்பதற்கு மக்கள் நேய கொள்கையினை நடைமுறைப்படுத்த  அரசாங்கம் உடனடி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தீர்மானமிக்க  தருணத்தில் நாட்டை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் தங்களின் கடமைகளை பொறுப்புணர்ந்து  நிறைவேற்ற  வேண்டும் என்பதை வலுவாக நம்புவதாக மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதென்பது  சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் ஊடாக மக்களின் இறைமையை உறுதிப்படுத்துவதாகும் என வலியுறுத்தியுள்ள மகாநாயக்கத் தேர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய முறையில் நடத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.