மட்டக்களப்பு மாநகர சபையால் வாகனங்களை பராமரிக்க முடியாதா? ரெலோ எம்.பி ஜனா கேள்வி

ஒரு மனிதன் மனிதாபிமான ரீதியாக இலவச அமரர் ஊர்தி சேவையினை செய்துவருகின்றபோது அந்த வாகனத்தினை பாதுகாக்க முடியாத மாநகரசபை எதற்கு என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் பொருளாளருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,கோவிந்தன் கருணாகரம் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது. அத்துடன் மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் உள்ள குறைபாடுகள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் கடந்த நான்கு வருடங்ளாக ஜி.கே.ஃபவுன்டேசன் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்திவருகின்றேன். உண்மையில் ஏழை மக்கள் இறந்த தங்கள் உறவுகளின் உடல்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்வதற்கான உதவியே அதுவாகும். இதுவரை 1200 உடல்களை நாங்கள் ஏற்றிக்கொண்டு கொடுத்திருக்கின்றோம்.

கட்சி பேதமின்றி அனைவருக்கும் உதவும் வகையில்தான் ஜி.கே.ஃபவுன்டேசன் இலவச அமரர் ஊர்தி சேவை இந்த மாவட்டத்தில் நடந்து வருகின்றது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கோவிட் தொற்றினால் இறந்த ஒருவரது உடல் மட்டக்களப்பு வைத்தியசாலையில் இருந்த காரணத்தினால் மட்டக்களப்பு வைத்தியசாலையில் மரணித்த மற்றைய நோயாளிகளின் உடல்கள் செங்கலடி, ஆரையம்பதி போன்ற மற்றைய வைத்தியசாலைகளில் தான் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. அந்த உடல்களைக்கூட எங்களது ஜி.கே.ஃபவுன்டேசன் இலவச அமரர் ஊர்தி தான் ஏற்றிக்கொடுத்தது.

அந்த ஊர்தியினை நான் சிறிது காலம் பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் தான் நான் தரித்து வைத்திருந்தேன். ஏனென்றால் இந்த வாகனத்திற்கும் அறக்கட்டளைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற தனியார் அமரர் ஊர்தி சேவை மேற்கொள்வோரால் எதிர்ப்பு இருக்கின்றது.

ஆகவே எனது வாகனத்தை வீதியில் தரித்து நிற்கச் செய்ய முடியாது. இந்த சேவையை நான் வேறு எவரது உதவியுமின்றி எனது தனிப்பட்ட நிதியிலிருந்துதான் செய்து வருகின்றேன். எனது உழைப்பின் ஒரு பகுதியை இதற்காக செலவு செய்கின்றேன். மீண்டும் இன்னுமொரு வாகனத்தை கொள்வனவு செய்து இதற்காக முதலிடும் நிலையில் நான் இல்லை.

அந்த அடிப்படையில் இரவு வேளையில் பாதுகாப்பிற்காக பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் குறிப்பிட்ட காலம் தரித்து நிற்கச் செய்திருந்தேன். அதற்குப் பின்னர் அங்கு தரிப்பிட வசதி இல்லாத காரணத்தினால் மாநகரசபையில் அனுமதி கேட்டு பிரேரணை ஒன்று சமர்ப்பித்து 38 உறுப்பினர்களும் ஏகமனதாக அந்த வாகனத்தை அங்கு தரித்து நிற்கச் செய்யலாம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி எனக்கு பிரதியும் தரப்பட்டுள்ளது.

இப்போது எனது வாகனம் வீதியில் நிறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் மாநகரசபை ஆணையாளருக்கும் மாநகரசபைக்கும் இடையில் அரசியல் ரீதியாக ஏற்பட்ட ஏதோவொரு பிரச்சினையாகும். மாநகரசபையின் 38 உறுப்பினர்களும் ஏகமனதாக அந்த வாகனத்தை இரவு வேளைகளில் மாத்திரம் அங்கே தரிக்கச் செய்வதற்கு அனுமதியை கொடுத்திருந்தும் ஆணையாளர் அந்த வாகனத்தை உள்ளே அனுமதிக்க மறுக்கின்றார்.

வெளியில் வீதியிலே நிற்கின்ற அந்த வாகனத்தை எவராவது தீப்பற்றவைத்தார்களானால் பாதிக்கப்படப்போவது ஏழை மக்களே ஆவர். எனக்கு இந்தப்பிரச்சினைக்கு இன்று ஒரு தீர்வு தராவிட்டால் இந்த சேவையை இன்றுடன் நான் நிறுத்தவுள்ளேன்.

மிகவும் கஷ்டப்பட்ட பிரதேச சபைகளான வாகரை,வவுனதீவு,போரதீவு போன்ற பிரதேச சபைகளே வண்டிகளை வைத்து இந்த வேலைகளை செய்து வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் முதுகெலும்பாகவும் வருமானமுள்ளதுமான மாநகரசபையானது ஒரு வண்டியை வைத்து அமரர் ஊர்தி சேவையினை செய்ய முடியும்.

ஒரு மனிதன் மனிதாபிமான ரீதியாக இந்த இலவச அமரர் ஊர்தி சேவையினை செய்துவருகின்றபோது அந்த வாகனத்தினை பாதுகாக்க உங்களால் முடியாதா? அப்படியானதொரு மாநாகரசபை எதற்கு? என கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் மாநகர ஆணையாளருடன் பேசி நல்ல தீர்மானத்தினை வழங்குவதாகவும் குறித்த சேவையினை தொடர்ந்து முன்னெடுக்குமாறும் இதன்போது மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் பதிலளித்துள்ளார்.