அரசியலமைப்பின் பிரகாரம் பொது நிதி தொடர்பான இறுதி அதிகாரம் பாராளுமன்றத்திடம் காணப்படுகின்ற போதிலும், நாட்டின் நிதிக்கொள்கை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய வங்கிக்கே காணப்படுகிறது.
அதன் சுயாதீன தன்மையில் எவரும் தலையிடுவதை நாம் விரும்பவில்லை என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் 22 ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வரவு செலவு திட்ட விவாதத்தின் போது மத்திய வங்கி மீது குற்றம் சுமத்தப்படுகிறது. பொருளதார நெருடிக்களுக்கு மத்திய வங்கியே காரணமென்றும் அதன் விளைவாகவே மக்கள் துன்பத்தினால் அவதிப்படுகிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.
நாட்டு மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் நிவாரணங்கள் சலுகைகளை மத்திய வங்கி வழங்க வேண்டும் என்கிறார்கள்.
இன்று நிதிக்கொள்கை என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொள்கையின் பிரகாரம் வேறொருவரின் விவனாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை.
அதேபோன்று சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் மத்திய வங்கி செயல்பட வேண்டும். அதன் நிதி தொடர்பான முடிவுகளை பிறர் எடுப்பதை நான் விரும்பவில்லை.
ஆனால் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பாராளுமன்றம் மற்றும் மத்திய வங்கி இரண்டினதும் கொள்கைகளின் ஒருங்கிணைப்பு நிச்சயம் இருக்க வேண்டும்.
வரிகளை விதிக்கவும் செலவினை கட்டுப்படுத்தவும் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. அதனால் தான் மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்ஜெட்டை நிறைவேற்றுவதைப் பார்க்கிறீர்கள். வரவு – செலவு திட்டத்தை நிறைவேற்றுகின்றனர்.
அரசியலமைப்பிற்கமைய பொருளாதாரம் பாராளுமன்றத்திற்கு உரித்துடையது. எனினும் அனைத்து பலமும் காணப்படுவதாக பலரும் கருதுகிறார்கள். ஆனால் பாராளுமன்றத்திற்கு பொது நிதி தொடர்பில் மாத்திரமே அதிகாரம் உள்ளது. மத்திய வங்கி தொடர்பில் சிலருக்கு புரிதல் குறைவாகவே உள்ளது என்றார்.