மத்திய வங்கி சுயாதீனத்தன்மையை இழந்து அரசியல் மயமாக்கப்பட்டமையே பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் – சாலிய பீரிஸ்

நாட்டில் கடந்த இரு ஆண்டுகளில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கான பிரதான காரணம் மத்திய வங்கி அதன் சுயாதீனத் தன்மையை இழந்தமையும் , அரசியல் மயப்படுத்தப்பட்டமையுமே ஆகும்.

எனவே மத்திய வங்கி மாத்திரமின்றி நீதித்துறை உட்பட ஏனைய அனைத்தும் சுயாதீனப்படுத்தப்பட வேண்டும். அதற்கு மக்கள் தமது இறையான்மையைப் பயன்படுத்த வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை (10) இலங்கை மன்றக்கல்லூரியில் சிவில் சமூக அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் ஆணைக்குழுக்களை பலப்படுத்த வேண்டும். அவற்றில் முதன்மையானது நீதி மன்றமாகும். அதே போன்று மனித உரிமைகள் ஆணைக்குழு, தேர்தல் , அரச சேவைகள் மற்றும் பொலிஸ் ஆணைக்குழு என்பவற்றை வலுப்படுத்த வேண்டும். வலுப்படுத்துவதோடு மாத்திரமின்றி அவற்றை சுயாதீனப்படுத்த வேண்டும்.

21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய இந்த ஆணைக்குழுக்களை புதிதாக நியமிக்கவுள்ளனர். இவற்றுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் அரசியலமைப்பு பேரவையானது , பொறுத்தமான நபர்களைக் கொண்டுள்ளதா என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். ஆணைக்குழுக்கள் சுயாதீனமானவையாகக் காணப்படுவதோடு மாத்திரமின்றி , மக்களுக்கு பொறுப்பு கூறும் நிறுவனங்களாகவும் இருக்க வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கான பிரதான காரணம் மத்திய வங்கி அதன் சுயாதீனத்தன்மையை இழந்தமையாகும்.

மத்திய வங்கி அரசியல் மயப்படுத்தப்பட்டமையானது நாடு இந்தளவு நெருக்கடிகளை எதிர்கொள்வதில் தாக்கம் செலுத்தியுள்ளது. எனவே இவ்வாறான நிறுவனங்களை பலப்படுத்துவதற்காக நாம் குரல் கொடுக்க வேண்டும்.

இவற்றுக்காக குரல் கொடுக்கும் போது எமக்கு பல்வேறு தடைகள் அல்லது இடையூறுகள் ஏற்படக் கூடும். எவ்வாறிருப்பினும் எதிர்கால சந்ததியினருக்காக நாம் இவற்றை கடந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

வாக்குரிமையானது இறையான்மை பலமாகும். மக்களிடமே அந்த இறையான்மை காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் மக்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையே இறையான்மை குறித்து சிந்திக்கின்றனர். இது தவறாகும். இறையான்மை குறித்து அன்றாடம் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார்.