முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் பூரண ஹர்த்தாலுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அழகராசா விஐயகுமார்,’வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் அழைப்பின் பேரில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தாலை மேற்கொள்வதுடன், அன்றையதினம் வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியொன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவினை வழங்குகின்றது. அந்த வகையிலே இன்று கறுப்பு ஜுலை வாரத்தை அனுஷ்டித்து கொண்டிருக்கின்ற வேளையிலும் எங்களுடைய தமிழ் மக்களுடைய பாரதூரமான பல்வேறுபட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.
இந்த அகழ்வு பணியில் கூட காவல்துறையினர் மட்டுமே காணப்படுகின்றனர். மேலும் சர்வதேச அமைப்புகள் ஒன்றுமே காணப்படவில்லை. இந்த அரசு எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மேலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
எங்களுடைய பிரச்சனையை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தாது தங்களுக்குள்ளே மறைத்து கொண்டிருக்கின்றது.
அந்த வகையிலே தமிழ் மக்களாகிய எங்கள் பிரச்சினைகள் வெளிப்படையாக தீர்வினை பெற வேண்டும். இன்றும் நாம் சுதந்திரமாக எமது நினைவேந்தல்களை கூட மேற்கொள்ள முடியாது இருக்கின்றோம்.
ஆகவே சரணடைந்த எங்களது காணாமலாக்கப்பட்ட உறுவுகளுக்கு நீதி வேண்டும் .அந்த வகையிலே அனைத்து மக்களும் கட்சி பேதமின்றி தமிழ் தேசிய பாதையில் பயணிக்கும் அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவினை வழங்கவேண்டும் ” என்றார்.