13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்; சுதந்திரக் கட்சி உறுதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில், 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2015, 2019 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பை ஸ்தாபிக்கும் பணிகள் இடம்பெற்றபோதும், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கும்போதுமட்டும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தோம்.

ஏனெனில், அது தெற்கு சிங்கள மக்களை பாதிக்கும் என்று தெரிவித்திருந்தோம்.

அதேபோன்று, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் நாம் அவதானம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தோம்.

எனவே, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கட்சி என்ற ரீதியில் எமது நிலைப்பாடாக இருக்கிறது.

இந்தநிலைப்பாட்டுடன், நாம் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள தீர்மானித்துள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.