உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி வியாழக்கிழமை நடத்த தேசிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வது சனிக்கிழமை பிற்பகல் 12 மணியுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து தேர்தலை நடத்தும் திகதியை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 4 ஆம் திகதி புதன்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.
இதற்கமைய கடந்த 5 ஆம் திகதி முதல் நேற்று வெள்ளிக்கிழமை வரை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்,சுயாதீன குழுக்கள் நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்ட செயலகங்களில் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தின.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பம் கடந்த மாதம் 5 ஆம் திகதி முதல் கோரப்பட்டன.விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் இன்றுடன் நிறைவு பெறும்.
கடந்த 18ஆம் திகதி (புதன்கிழமை) முதல் இன்று 21 ஆம் திகதி வரை வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உட்பட பெரும்பாலான சுயாதீனக் குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி அடிப்படையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியும்,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் ஒருசில மாவட்டங்களில் கூட்டணியாக போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இதுவரை பொதுச் சின்னம் தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை.