இலங்கை தமிழ் அரசுக் கட்சியிலிருந்து தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அகற்றப்பட்டு வருகிறார்கள். கட்சித்தலைவர் மாவை சேனாதிராசா அடுத்த ஓரிரண்டு மாதங்களில் கட்சியை விட்டு வெளியே அனுப்பப்படுவார். அதன் பின்னர் சி.சிறிதரன் வெளியே அனுப்பப்படுவார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளுாராட்சி தேர்தலில் குத்து விளக்குச் சின்னத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று பளையில் நடந்தபோது அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் முதல் முதலில் ஒட்டுக்குழுக்களாக கருதப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் இரண்டு. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும், அகில இலங்கை தமிழ் காங்கிரசுமே ஒட்டுக்குழுக்களாக கருதப்பட்டு, அதன் தலைவர்கள் சுடப்பட்டனர். இரண்டு ஒட்டுக்குழுக்களின் தலைவர்களும் இந்தியாவுக்கு தப்பியோடிவிட்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால், ஆகக் கடைசியாக தடை நீக்கப்பட்ட இரண்டு ஒட்டுக் குழுக்களும் இவைதான். அதாவது, விடுதலைப் புலிகளினால் அதிக காலம் ஒட்டுக்குழுக்களாக தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் இவை.
போராட்ட காலத்தில் கொழும்பிலிருந்த ஆபிரகாம் சுமந்திரன், யுத்தத்துக்கு பின்னர் வடக்குக்கு வந்து போராளிகளை குற்றம்சாட்டுகிறார். அவர் உண்மையான இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்காரனா என்பது எனக்கு தெரியாது. இந்த மண்ணிலும், மக்களிலும் பற்றுக் கொண்டவரா என்பதும் எனக்கு தெரியாது. ஆனால், ஒரு இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினராக விடுதலைப்புலிகள் மீது வெறுப்பை வெளிப்படுத்தி வருகிறார். அவரது கட்சியை நீண்ட காலம் தடை செய்து, தலைவர்களைச் சுட்டதால் அவர் புலிகளில் வெறுப்பை வெளிப்படுத்தக் கூடும்.
தனக்கு ஆயுத வழியில் உடன்பாடில்லையென அவர் கூறுவதன் பின்னணி இதுதான். இப்பொழுது அவருடன் இணைந்திருப்பவர்களும் இந்த வகையானவர்கள்தான். 3 வருடங்கள் வரை மகிந்த ராஜபக்ஷவின் அமைப்பாளர்தான் எம். ஆபிரகாம் சுமந்திரனின் வலது கை.
இந்தவகையானவர்கள் தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தில் உண்மையாக இருப்பார்கள் என நம்புவது முட்டாள்தனம். தமிழ் அரசுக் கட்சிக்குள் உண்மையான தமிழ் தேசிய உணர்வுடன் செயற்பட்ட யார் இன்று இருக்கிறார்கள்? அனைவரும் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். பேராசிரியர் சிற்றம்பலம், அருந்தவபாலன் என நீண்ட இந்த பட்டியல், இப்பொழுது கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவில் வந்து நிற்கிறது.
மாவை சேனாதிராசா இன்றும் சில மாதங்களுக்குள் ஆபிரகாம் சுமந்திரன் தரப்பினரால் கட்சியை விட்டு வெளியேற்றப்படுவார். இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் தமிழ்த் தேசிய உணர்வுடன் செயற்படுபவர்களில் ஒருவர் சிறிதரன். அவருக்கு தற்போதைய நிலை மிக சங்கடமாகத்தான் இருக்கும்.
ஆனால் அவராலும் எதுவும் செய்ய முடியாமல் மௌனமாக இருக்கிறார். கிளிநொச்சியில் அவரை தோற்கடிக்க, இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் நுழைந்துள்ள அரச தரப்பு சுயேச்சைக்குழுவொன்றை களமிறக்கியுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.
உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் அந்த சுயேச்சைக் குழு ஆபிரகாம் சுமந்திரன் தரப்பு இலங்கை தமிழ் அரசுக் கட்சியாக மாறி, சந்திரகுமாரின் சமத்துவ கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கும். இதை நான் சும்மா சொல்லவில்லை. அதற்கான இரகசிய பேச்சுக்கள் எல்லாம் முடிந்து விட்டன என்ற நம்பகரமான தகவல் எமக்கு உறுதியாக தெரியும்.
அப்போது, சிறிதரனும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியை விட்டு நீக்கப்படுவார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியை அரச ஏஜெண்ட்கள் கைப்பற்றினாலும், கிளிநொச்சி மாவட்ட மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு காப்பாற்றும். மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தமிழ் தேசிய அரசியல் இயக்கமாக செயற்படும் – என்றார்.