இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் 5000 பேர் இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், எவ்வித தயக்கமும் இன்றி இராஜினாமா கடிதங்களை ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உத்தரவிட்டுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எந்த ஒரு ஊழியரின் ராஜினாமாவையும் தயக்கமின்றி ஏற்கும்படி இலங்கை மின்சாரசபை நிர்வாகத்துக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே வேளை இராஜினாமா செய்பவர்கள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய அனைத்து பாக்கிகளையும் வசூலிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் சீர்திருத்தங்கள் தொடர்பான பணிகளை துரிதப்படுத்துமாறு மின்சாரசபை நிர்வாகத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
சீர்திருத்தங்களில் செலவு குறைப்பு வழிமுறைகள், உற்பத்தித் திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மின் திட்டங்களை செயல்படுத்துதல், டிஜிட்டல் கட்டண தளத்தை விரிவுபடுத்துதல் என்பன உள்ளடங்குகின்றன.
இந்த வருடம் ஜனவரி மாதம் இடம்பெற்ற அடையாள வேலைநிறுத்தத்தின் போது இலங்கை மின்சார சபையின் சேவைகளுக்கு இடையூறு விளைவித்த பணியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 5000 மின்சாரசபை ஊழியர்கள் ஒரே நேரத்தில் இராஜினாமா செய்யத் தயாராகி வருகின்றனர் என்று வெளியாகியுள்ள செய்தியின் அடிப்படையில் அமைச்சரால் இந்த புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ஊழியர்களை அடக்குவதற்கு அமைச்சின் முயற்சிக்கு எதிராக மின்சாரசபை தொழிற்சங்கக் கூட்டமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.