இலங்கை எதிர்நோக்கி வரும் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைவரின் ஆதரவும் அவசியம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுக் கடன் நிவாரணம் கிடைத்துள்ள நிலையில், இலங்கையின் பொருளாதார நிலை படிப்படியாக மீண்டு வரத் தொடங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவின் சிரேஷ்ட தலைவர் பீட்டர் ப்ரூவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீண்டகால பொருளாதார பிரச்சினைகள் மற்றும் தவறான கொள்கை முடிவுகளினால் இலங்கை வரலாற்றில் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேர்ந்ததாக ப்ரூவர் தெரிவித்தார்.
தற்போதுள்ள நிலைமையிலிருந்து விடுபட சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் 04 வருடங்களில் 03 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க தீர்மானித்துள்ளதுடன், அந்த பாரிய பிரச்சினையை தீர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கவும், நிதி ஸ்திரத்தன்மையை உருவாக்கவும், வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்கவும், கடன் நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் ஏற்கனவே புதிய பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கை அதிகாரிகள் சமூக பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரு பீட்டர் ப்ரூவர் கூறுகிறார்.
பொருளாதாரத்தை வலுப்படுத்த, அதிக வருமானம் ஈட்டுபவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.
அதற்காக, முற்போக்கான வரி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவது, பொது நிதி நிர்வாகத்தை மேம்படுத்துவது மற்றும் ஊழல் எதிர்ப்பு சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவது அவசியம்.
சர்வதேச நாணய நிதியம் அதற்கான பரிந்துரைகளை வழங்கும் என்றும் இலங்கையின் எதிர்காலத்தை பிரகாசமாக்குவதற்கு நெருக்கமாக செயற்படும் என நம்புவதாகவும் பீட்டர் ப்ரூவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.