விரிவாக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின்கீழ் இலங்கை தொடர்பான முதலாம் கட்ட மதிப்பீட்டுக்கு நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில், இரண்டாம் கட்டமாக 330 மில்லியன் டொலர் நிதி இலங்கைக்கு வழங்கப்படுமென சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
அதேவேளை கடன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு ஏதுவாக கடன்மறுசீரமைப்பு தொடர்பான இணக்கப்பாடு வெகுவிரைவில் எட்டப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ள நாணய நிதியம், அதில் ஏற்படும் தாமதம் இலங்கையின் பொருளாதார நிலைவரம் மோசமடைவதற்கும், நிதியியல் இடைவெளி அதிகரிப்பதற்கும், நிலைபேறான பொருளாதார வளர்ச்சி பாதிப்படைவதற்கும் வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின்கீழ் 48 மாதகாலத்தில் சுமார் 2.9 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கான உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி எட்டப்பட்டது. அதன்படி அக்கடன்தொகையில் முதற்கட்டமாக 330 மில்லியன் டொலர் கடன்நிதி கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இலங்கைக்குக் கடனுதவியை வழங்குவதற்கு ஈடாக சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அரசாங்கம் உரியவாறு நிறைவேற்றியிருக்கின்றதா எனக் கண்காணிக்கும் நோக்கிலான முதலாம் கட்ட மதிப்பீடு கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்றது. இருப்பினும் அம்மதிப்பீட்டின் இறுதியில் கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றம் எட்டப்படாததன் காரணமாக இரண்டாம் கட்ட கடன்நிதி விடுவிக்கப்படும் காலப்பகுதியை உறுதிபடக் கூறமுடியாது என சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் அறிவித்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட தொடர் பேச்சுவார்த்தைகளின் விளைவாக முதலாம் கட்ட மதிப்பீடு தொடர்பில் இருதரப்பினருக்கும் இடையில் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இலங்கை அதிகாரிகளுடன் கொழும்பிலும், மொரோக்கோவின் மரகேச்சிலும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து எட்டப்பட்டுள்ள இந்த இணக்கப்பாடு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் பீற்றர் ப்ரூயர் மற்றும் பிரதித்தலைவர் கற்ஸியரினா ஸ்விரிட்ஸென்கா ஆகியோரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
விரிவாக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின் கீழ் இலங்கை தொடர்பான முதலாம் கட்ட மதிப்பீடு குறித்து சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாட்டை எட்டியுள்ளனர்.
அரசாங்கத்தினால் முற்கூட்டியே அமுல்படுத்தப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நிதியியல் உத்தரவாதம் தொடர்பான தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்தல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையினால் இதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிதியியல் உத்தரவாதமானது கடன்மறுசீரமைப்பு செயன்முறை உரிய காலப்பகுதியில், கடன்சார் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்யக்கூடியவகையில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை அளிக்கப்படுதலையும் உள்ளடக்கியிருக்கின்றது.
அதன்படி தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையினால் வழங்கப்பட்டுள்ள அனுமதியின் பிரகாரம் இலங்கைக்கு இரண்டாம் கட்டமாக 330 மில்லியன் டொலர் கடன்நிதி வழங்கப்படும். அதன்மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின்கீழ் இதுவரையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்நிதியின் பெறுமதி 660 மில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது.
விரிவாக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களை முழுமையாக நிறைவேற்றுவதற்கான அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை இலங்கை அதிகாரிகள் கொண்டிருக்கும் அதேவேளை, பணவீக்க வீழ்ச்சி மற்றும் இவ்வருட இறுதியில் எதிர்பார்க்கப்படும் குறிப்பிடத்தக்களவிலான நிதியியல் சீராக்கம் என்பன உள்ளடங்கலாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மறுசீரமைப்பு முயற்சிகள் பாராட்டத்தக்கவையாகும்.
கடந்த ஜுன்மாத இறுதியில் செயற்திட்ட அமுலாக்கம் திருப்திகரமானதாக அமைந்திருப்பதுடன் ஜுன் இறுதியில் செலவின நிலுவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து எண்கணியம் சார்ந்த தேவைப்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. அதேபோன்று வரிவருமானம் தவிர்ந்த ஏனைய அனைத்து குறிக்கப்பட்ட இலக்குகளும் அடையப்பட்டுள்ளன. கடந்த செப்டெம்பர்மாத இறுதியில் மிகமுக்கிய கட்டமைப்பு மறுசீரமைப்புக்கள் அடையப்பட்டிருக்கின்றன அல்லது தாமதமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
அத்தோடு இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தினால் ஆட்சியியல் ஆய்வு அறிக்கை உரிய காலப்பகுதியில் வெளியிடப்பட்டதுடன், ஆசியப்பிராந்தியத்தின் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட முதலாவது நாடு இலங்கையாகும். 2024 ஆம் ஆண்டில் நாணய நிதியத்தின் செயற்திட்டத்துக்கு அமைவாக எட்டப்படவேண்டிய நிதியியல் அடைவுகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலான வருமானம்சார் மறுசீரமைப்புக்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைவதற்கான தற்காலிக சமிக்ஞைகள் தென்படுகின்றன. கடந்த ஆண்டு செப்டெம்பரில் 70 சதவீதம் எனும் மிக உயர்ந்த மட்டத்தில் காணப்பட்ட பணவீக்கம், இவ்வாண்டு செப்டெம்பரில் 1.3 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. இவ்வாண்டு மார்ச் – ஜுன் மாதத்துக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மொத்த வெளிநாட்டுக்கையிருப்பு 1.5 பில்லியன் டொலர்களால் அதிகரித்ததுடன், அத்தியாவசியப்பொருட்களுக்கு நிலவிய தட்டுப்பாடு சீரமைக்கப்பட்டது.
ஸ்திரநிலைக்கான இத்தகைய ஆரம்பக் குறிகாட்டிகள் தென்பட்ட போதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னமும் அடையப்படவில்லை. கடன்மறுசீரமைப்பு தொடர்பான நீண்டகால கலந்துரையாடல்கள் மற்றும் அண்மைய சில மாதங்களில் இருப்பு திரட்சி மிதமடைந்தமை ஆகியவற்றின் விளைவாக இலங்கையின் வெளியக நிலைவரம் வலுவிழந்துள்ளது. எனவே கடன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தக் கூடியவாறான கடன்மறுசீரமைப்பு செயன்முறை தொடர்பில் வெகுவிரைவில் இணக்கம் காண்பது இலங்கையின் வணிக செயற்பாடுகள் மற்றும் வெளியக நிதியிடல் என்பவற்றில் நிலவும் நிலையற்ற தன்மைக்கான தீர்வை வழங்கும்.
நாட்டின் பொருளாதாரத்தை நிலையான மீட்சி, ஸ்திரத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை நோக்கிக் கொண்டுசெல்வதற்கு நிலையான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது இன்றியமையாததாகும். வருமானத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாடு மற்றும் அவசியமான வரி அறவீடு, வரி நிர்வாக வலுவாக்கம், வரி ஏய்ப்புக்களை இல்லாதொழித்தல் ஆகியவற்றின் மூலம் ஆட்சியியல் மேம்பாட்டை அடைவதற்கான நடவடிக்கைகள் என்பவற்றை வரவேற்கின்றோம்.
எரிபொருள் மற்றும் மின்சாரத்துக்கு செலவினங்களை ஈடுசெய்யும் வகையிலான விலையிடல் முறைமையைப் பின்பற்றுவதன் மூலம் அரசுக்குச் சொந்தமான கட்டமைப்புக்கள் முகங்கொடுக்கக்கூடிய நிதியியல் அச்சுறுத்தல்களைக் குறைத்துக் கொள்ள முடியும்.
அதேவேளை வறிய மற்றும் நலிவுற்ற மக்களைப் பாதுகாப்பதற்கு ஏதுவான சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களை வலுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
மேலும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் உள்ளகக் கடன்மறுசீரமைப்பின் அடுத்தகட்டமாக உத்தியோகபூர்வ கடன் வழங்குனர்களுடன் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடொன்றை எட்டவேண்டும். இலங்கைக்கும் சீன ஏற்றுமதி – இறக்குமதி வங்கிக்கும் இடையில் எட்டப்பட்டிருக்கும் இணக்கப்பாடு தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியிருப்பதுடன், அதுகுறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றதுடன் அதனை ஆராய்வதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.
அதேபோன்று வர்த்தகக் கடன் வழங்குனர்களுடன் இலங்கை முன்னெடுத்துவரும் கலந்துரையாடல்கள் தொடர்பில் நாம் அறிந்திருக்கின்றோம்.
இவற்றில் ஏற்படக்கூடிய தாமதம் இலங்கையின் பொருளாதார நிலைவரம் மோசமடைவதற்கும், நிதியியல் இடைவெளி அதிகரிப்பதற்கும், நிலைபேறான பொருளாதார வளர்ச்சி பாதிப்படைவதற்கும் வழிவகுக்கும்.
அண்மையில் வெளியிடப்பட்ட ஆட்சியியல் ஆய்வு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளமை வரவேற்கத்தக்க நகர்வாகும். ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதும், பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதும் பொருளாதாரம் சார்ந்த நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு இன்றியமையாததாகும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.