வரவு செலவுத் திட்டத்தில் குறைந்த அளவு பற்றாக்குறையை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியம்

உறுதியான வரவு செலவுத் திட்டம் மற்றும் குறைந்த அளவிலான வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை ஆகியவற்றையே இலங்கையிடம் சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாக ரொய்ட்டஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினுடைய நிகழ்நிலைச் சந்திப்பொன்று வொஷிங்டனில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பினை மேற்கோள் காண்பித்து ரொய்ட்டஸ் செய்திச் சேவை விடுத்துள்ள செய்தியில்,

இலங்கையின் வரவு,செலவுத்திட்டம் இந்த ஆண்டின் இறுதியில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறை 15 சதவீதமாகக் காணப்படுமென்ற கணிப்புக்கள் எமக்குள்ளன. அத்தோடு எதிர்வரும் ஆண்டில் வரவு,செலவுத்திட்டப் பற்றாக்குறை ஏற்படாமலிருப்பதை உறுதி செய்யவேண்டும் என்பதை சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்துள்ளது.

அத்துடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதத்தை விடவும் அதிகமான அரசாங்கத்தினது வருமானம் காணப்படுவதை இலங்கை உறுதி செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது.

மேலும், இலங்கை அரசாங்கத்தின் வருமானப் பற்றாக்குறைக்கான இடைவெளி குறைக்கப்படும் பட்சத்தில், எஞ்சியுள்ள இடைவெளியை நிரப்புவதற்கு விரும்பும் கடன் வழங்குநர்களிடம் இருந்து அதனை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான நிலைமகள் ஏற்படும்.

இதேவேளை, இலங்கை கடந்த ஏழு தசாப்தங்களில் காண்டிருக்காத அளவிற்கு பொருளாதார நெருக்கடியினைச் சந்தித்திருந்த நிலையில் அதிலிருந்து மீள்வதற்கான சர்வதேச நாணய நிதியம் நீடிக்கப்பட்ட கடன்வசதி திட்டத்தின் கீழ் 2.9 பில்லியன் டொலர்களை வழங்கியிருந்தது.

இந்த நீடிக்கப்பட்ட கடன்வசதியின் இரண்டாவது தவணைக்கான கொடுப்பனவான 330 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கான ஊழியர்கள் மட்ட இணக்கப்பாட்டை சர்வதேச நாணயநிதியம் இலங்கை அரசாங்கத்துடன் எட்டிக்கொண்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது