முன்னாள் ஜனாதிபதிகளால் பொது நிதி வீணடிப்பு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தனது தனிப்பட்ட பணியாளர்களுக்காக ஜனாதிபதியின் மொத்த செலவினத்தில் 43 வீதத்தை பயன்படுத்தியுள்ளார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தமது தனிப்பட்ட பணியாளர்களுக்காக 57 வீதத்தை பயன்படுத்தியுள்ளார்.

தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உத்தரவு மூலம் இந்த விபரங்கள், ஊடகம் ஒன்றினால் பெறப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, 2010 முதல் 2014 வரை 630 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான செலவில் 2,578 பேர் கொண்ட தனிப்பட்ட பணியாளர்களைக் கொண்டிருந்தார்.

எனினும் 2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் மைத்ரிபால சிறிசேன 1347 பணியாளர்களுக்காக 850 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை செலவிட்டிருந்தார்.

அந்த வகையில், இரண்டு ஜனாதிபதிகளும் தமது தனிப்பட்ட பணியாளர்களை பராமரிப்பதற்காக 1480 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.