அரசாங்கத்தின் வெற்றிக்காக செயற்பட்ட தாம் தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கிய 12 சிறு அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.
ஐக்கிய இலங்கை பொதுஜன கட்சி, அருணலு மக்கள் முன்னணி, எமது மக்கள் உரிமை கட்சி, சமூக அபிவிருத்தி கட்சி, தேசிய பொதுஜன கட்சி, மக்கள் அபிவிருத்தி கட்சி, ஹெலபிம ஜனதா கட்சி, ஐக்கிய இலங்கை மக்கள் சக்தி கட்சி, இலங்கை இந்திய பிரஜைகள் கட்சி, ஐக்கிய சுதந்திரக் கட்சி, ஐக்கிய ஜனநாயக மக்கள் கட்சி, இலங்கை ஜனநாயக தேசியக் கட்சி ஆகியன இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அரசாங்கம் தொடர்பான தமது அதிருப்தியை வௌிப்படுத்தின.
மொட்டுடன் கைகோர்த்து தற்போதுள்ள அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் உருவாக்க ஒத்துழைப்பு வழங்கிய போதும், தமது கருத்துக்கள் செவிமடுக்கப்படுவதில்லை என ஐக்கிய இலங்கை பொதுமக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ருவன் திலக்க பேதுருஆரச்சி குறிப்பிட்டார்.
இந்த நிலை தொடர்ந்தால் அரசாங்கமும் நாடும் நாட்டு மக்களும் கஷ்டத்தில் வீழ்வார்கள் என அவர் குறிப்பிட்டார்.
இது நாட்டு மக்களின் துரதிர்ஷ்டம் என கூறி மெளமாக இருக்க தாம் தயாரில்லை என கூறிய ருவன் திலக்க, சரியான பாதையில் பயணிக்க முடியாவிட்டால் அரசுடனான நட்புறவை கைவிட வேண்டிய நிலை தமக்கு ஏற்படும் என கூறினார்.