மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளில் தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் யானைகள் உயிர் இழக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன இவற்றை தடுப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் வன பாதுகாப்பு அலுவலகங்கள் மிக மிக குறைவான அளவிலேயே உள்ளன. எனவே புதிய அலுவலகங்கள் அமைக்கப்படவேண்டுமெனவும், சட்டவிரோத மண் அகழ்வினை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுற்றாடல் அமைச்சு,வனஜீவராசிகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு,சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சுற்றாடல் வன ஜீவராசிகள் வன வளங்கள் சுற்றுலாத்துறை காணி போன்ற முக்கியமான மூன்று அமைச்சுகளின் கீழ் உள்ள ஐந்து அமைச்சுக்கள் விடயதானம் சம்பந்தமான விவாதம் இன்று நடைபெறுகின்றது. இந்த நாட்டிற்கு வளத்தை ஏற்படுத்துவதும் இந்த நாட்டிலே கூடுதலான பிரச்சனைகளை கொண்டதுமான இந்த அமைச்சுகள் இன்று விவாதத்தில் இருக்கின்றது. உண்மையிலேயே இலங்கையில் 25 மாவட்டங்களில் 18 மாவட்டங்கள் யானைக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட மோதல் உள்ள மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதிலும் ஆறு மாவட்டங்கள் கூடுதலான பிரச்சினை உள்ள மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதிலே கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை போன்ற மாவட்டங்களும் பொலநறுவை அனுராதபுரம் குருநாகல் போன்ற மாவட்டங்களுடன் சேர்த்து மேலதிகமாக புத்தளம் மஹியங்கணை பிரதேசங்களும் இன்று யானைக்கும் மனிதர்களுக்கும் இடையிலே மோதல்கள் உருவாகும் ஒரு பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது.
குறிப்பாக நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்டத்தை பற்றி பேசலாம் என்று நினைக்கின்றேன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பு யானையினால் தாக்கப்பட்டு 20 மனிதர்கள் உயிரிழந்திருக்கின்றார்கள்,24 பேர் காயப்பட்டு இருக்கின்றார்கள். அதேபோன்று முதலையினால் பாதிக்கப்பட்ட ஒருவர் மரணம் அடைந்திருக்கின்றார், இன்னொருவர் காயமடைந்திருக்கின்றார். அதே நேரத்திலே 14 யானைகள் இந்த வருடத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இறந்திருப்பதுடன் 205 வீடுகள் யானைகளினால் சேதமாக்கப்பட்டிருக்கின்றது. 2021 ஆம் ஆண்டு 18 மனிதர்கள் இறந்திருக்கின்றார்கள் யானையினால் தாக்கப்பட்டு, முதலையினால் தாக்கப்பட்டு மூன்று பேர் இறந்திருக்கின்றார்கள். 2017 இல் இருந்து 2022 காலப்பகுதியில் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் யானையினால் தாக்கப்பட்டு 78 பேர் மரணம் அடைந்திருக்கின்றார்கள். அதேவேளையில் 95 மனிதர்கள் காயப்பட்டு இருக்கின்றார்கள். முதலையினால் 15 மனிதர்கள் இறந்திருக்கின்றார்கள். வீடுகள் கூட 550 வீடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் யானையினால் சேதம் ஆக்கப்பட்டிருக்கின்றது. அதே வேளையிலே இந்த ஐந்தாண்டு காலத்திலும் 90 யானைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இறந்திருக்கின்றன. இதற்கு எல்லாம் காரணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வன பாதுகாப்பு அலுவலகங்களும் அலுவலர்களும் மிகக் குறைவாக இருக்கின்றமையே. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே ஒரு ரேஞ்ச் ஆபீஸ் (Range office) மாத்திரமே இருக்கின்றது அத்துடன் பீட் ஆபீஸ் (Beat office) என்று சொல்லப்படும் உப அலுவலகங்கள் இரண்டு மாத்திரமே இருக்கின்றது. ஏனைய மாவட்டங்களை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவான அலுவலகங்களாகவும் குறைவான அலுவலர்களைக் கொண்ட ஒரு மாவட்டமாகவும் இருக்கின்றது. உதாரணத்திற்கு திருகோணமலை மாவட்டத்தில் ஆறுக்கு மேற்பட்ட ரேஞ்ச் ஆபீஸ்கள் இருக்கின்றது. கிட்டத்தட்ட பீட் அலுவலகங்களுடன் சேர்த்து 10 அலுவலகங்கள் இருக்கின்றது. ஒரு அலுவலகத்திற்கு நிரந்தரமாக நான்கு பேர் தான் அங்கு கடமையில் ஈடுபட்டாலும் இந்தப் பெரிய மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மூன்று அலுவலகத்திலும் பன்னிரண்டு பேர் தான் யானையிலிருந்து மனிதர்களை காப்பாற்றுவதற்கோ மனிதர்களிடமிருந்து யானைகளை காப்பாற்றுவதற்கோ 12 அலுவலர்கள் தான் அங்கு இருக்கின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு லட்சம் வேலை வாய்ப்பு வேலை வாய்ப்புக்கு உட்படுத்தப்பட்டு 180 பேர் யானை பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டு இருந்தாலும் 25 பேர் அந்த வேலைகளில் இருந்து விட்டு விலகி இருக்கின்றார்கள். காரணம் என்னவென்றால் அவர்களுக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் மாத்திரமே சம்பளமாக வழங்கப்படுகின்றது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இந்த ஆயிரம் ரூபாய் அவர்களது குடும்பத்தை கொண்டு நடத்துவதற்கு போதாத காரணத்தினால் அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைகளுக்கு சென்றிருக்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தமட்டிலே 210 கிலோமீட்டர் தூரத்திற்கு யானை வேலி போடப்பட்டிருக்கின்றது. கிரான், வாகரை பிரதேசத்திலே 104 கிலோ மீட்டர்களுக்குரிய யானை வேலிக்குரிய பொருட்கள் அங்கு வந்திருக்கின்றது. ஆனால் அங்கு யானை வேலிகள் அமைக்கப்படவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தமட்டிலே தற்போது மட்டக்களப்பு நகரத்திலே ஒரு ரேஞ்ச் ஆபிஸும் வெல்லாவெளியிலும் கிரானிலும் அந்த பீட் ஒப்பீஸ்கள் இருக்கின்றது. எதிர்காலத்திலே மட்டக்களப்பிலே இரண்டு ரேஞ்ச் ஆபிஸ்களை நீங்கள் உருவாக்க வேண்டும். வெல்லாவெளி பிரதேசத்தில் ஒரு ரேஞ்ச் ஆபிஸும் கிரான் பிரதேசத்தில் ஒரு ரேஞ்ச் ஆபிஸும் மூன்று பீட் ஒப்பீஸ்களும் அத்தியாவசியமாக அவசரமாக தேவைப்படுகின்றது. புல்லுமலை, கரடியியனாறை மையப்படுத்தி ஒரு அலுவலகமும், வவுணதீவு, பஞ்சேனை, பட்டிப்பளை போன்றவற்றை மையப்படுத்தி அலுவலகமும் வாகரை பிரதேசத்தை உள்ளடக்கி ஒரு அலுவலகமும் அமைக்க வேண்டிய ஒரு தேவை அங்கு இருக்கின்றது.
இன்னமும் குறைந்தபட்சம் வாகரை பிரதேசத்தில் இருந்து 300 கிலோமீட்டருக்கும் மேலாக வெல்லாவெளிப் பிரதேசம் வரை யானை வேலி இருக்க வேண்டிய இடங்களிலே பகலில் மாத்திரமே அந்த ஒரு லட்சம் வேலை வாய்ப்புக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அங்கு வேலையில் ஈடுபடுகின்றார்கள். இரவு வேலைகளில் தான் யானைகள் யானை வேலியை உடைத்துக்கொண்டு விவசாயிகளின் வயல்வெளிகளிலும், கிராமப்புறங்களில் இருக்கும் பயன் தரும் மரங்களையும் அவர்கள் சேமித்து வைத்திருக்கும் நெல்களை சேதப்படுத்துகின்றது இந்த யானைகள். எனவே மாவட்டத்திற்கு நீங்கள் மேலதிகமாக மூன்று அலுவலகங்களை கொடுக்க வேண்டும்.
வெல்லாவெளிப் பிரதேசத்தை பொருத்தமட்டில் தளவாய் காடு ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட அந்த காட்டிலே பெரிய மரங்கள் எதுவுமே இல்லை. அந்த தளவாய் காட்டிற்குள் வெறும் சின்ன சின்ன பற்றைக் காடுகள் தான் இருக்கின்றது. யானைகள் கிட்டத்தட்ட 70,75 யானைகள் அந்த பிரதேசத்திலே பகலிலே ஒளித்து நின்று இரவிலே கிராமப்புறங்களில் உள்நுழைந்து கிராம வீடுகளை சேதப்படுத்துவது மாத்திரமல்லாமல் அந்த பிரதேச மக்கள் தங்களது உயிரை கையில் பிடித்தபடியே இரவிலே தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே அந்தப் பிரதேசம் தற்போது வனவளத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. வன வளத்திற்குரிய பெரிய காடுகள் எதுவுமே அந்த பிரதேசத்தில் இல்லாத காரணத்தினால் அந்த பிரதேசம் துப்புரவு செய்யப்பட்டு எதிர்காலத்திலே மேய்சல் தரைக்கு பயன்படுத்தப்படுமாக இருந்தால் அந்தப் பிரதேசத்தில் மாடுகள் ஆடுகள் கூட அங்கு மேய்ச்சலுக்காக கொண்டு செல்லும் போது யானைகள் தங்க வேண்டிய ஒரு நிலை அங்கு ஏற்படாதது மாத்திரமில்லாமல் அந்த பிரதேச மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை கூட கூட்டி கொள்வார்கள் என்பதற்காக வனவளத் திணைக்களம் எதிர்காலத்தில் நீங்கள் அந்த பிரதேசத்தை விடுவிக்க வேண்டும் என்று இத்தால் நான் கேட்டுக் கொள்கின்றேன்.
வனவளத் திணைக்களம் கொழும்பிலிருந்து ஜிபிஎஸ் ஊடாக காட்டை கணிப்பிட்டு கல்போடுகின்றீர்கள் நீண்ட காலமாக வயல் செய்த காணிகள்,நீண்ட காலமாக மேட்டு பயிர் செய்த காணிகள், அது மாத்திரமல்லாமல் மட்டக்களப்பு வாவியின் ஓரமாக உள்ள காணிகளுக்கு கூட வனவளத் திணைக்களம் கல் போடுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேசத்தில் ஆற்றங்கரை ஒட்டிய பிரதேசங்களில் கடந்த காலங்களிலே இறால் வளர்ப்பு அங்கு நடைபெற்றது. தற்போது அந்த பிரதேச செயலகத்தினால் அந்த வாவியை ஒட்டிய கிட்டத்தட்ட 400 ஏக்கருக்கு மேற்பட்ட பிரதேசம் இறால் வளர்ப்புக்காக அடையாளப்படுத்தப்பட்டு அந்தப் பிரதேச மக்களுக்கு பிரித்து கொடுப்பதற்கு தயாராக இருக்கும் போது அந்த பிரதேசத்தைக் கூட நீங்கல் கல் போட்டு தடுக்கின்றீர்கள்.
எனவே மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இந்த பொருளாதாரச் சூழ்நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் போது அந்த மக்கள் பொருளாதார ரீதியாக பலப்படுத்த கொஞ்சமாவது நெகிழ்வு தன்மையுடன் வனவளத் திணைக்களத்தினர் தங்களது நடவடிக்கைகளை செய்து கொள்ள வேண்டும். அத்துடன் சுற்றாடல் அமைச்சர் இங்கு இருக்கின்றார். எங்களுக்கு உறுதியளித்திருக்கின்றார் அங்கு மண் மாபியாக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதாக சட்டத்துக்கு முரணாக மண்ணேற்றுபவர்களை கட்டுப்படுத்துவதாக உறுதியளித்திருக்கின்றார்.
ஆனால் அங்கு இராணுவம், போலீஸார் அவர்களது அனுசரணையுடன் தற்போதும் இரவிலே மண் ஏற்றுவது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தாண்டியடி விசேட அதிரடிப் படையினர் மிகவும் நிதானமாக அவர்கள் செயல்படுகின்றார்கள். சட்ட விரோதமாக மண் ஏற்றுவதை தடுக்கின்றார்கள் இருந்தாலும் சில இடங்களிலே குறிப்பாக சொல்ல போனால் வாழைச்சேனை பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பட்டியடி வழி வாகனேரி சந்தியாறு போன்ற இடங்களிலே 8500 ஏக்கர் நெற் பயிர்க்காணிகளுக்கு அதனுடாக ஊடறுத்துச் செல்லும் ஆற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்ச முடியாத ஒரு நிலையில் இருக்கின்றது. ஏனென்றால் அந்த ஆற்றிலே மண்ணெடுப்பதனால் வயல்வெளியில் இருந்து ஆறு மிகவும் பள்லத்தில் இருக்கின்றது. எனவே எருக்கலம் காட்டு பாலத்துக்கு பக்கத்திலே ஒரு விசேட அதிரடிப்படையின் கண்காணிப்பு சோதனைச் சாவடி ஒன்று அமைக்கப்படின் அந்த பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக மண் அகற்றுவதை தடுக்கலாம். ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திலே வயல் வெளியில் ஒரு அகழ் எந்திரம் (Excavator)அது வயல் திருத்துவதற்கும் இல்லை. பகலிலே சும்மாக தரித்து நிற்கின்றது. இரவிலே சட்டவிரோதமாக அந்த பிரதேசத்திலே அவ்வியந்திரத்தைப் பயன்படுத்தி மண் அகழவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இதை அமைச்சர் அவர்கள் கவனத்தில் எடுத்து அந்த பிரதேசத்தை காப்பாற்ற வேண்டும் என்றார்.