யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழாவினை கொண்டாடுவதற்காக வடக்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமலாக்கப்படடோரின் உறவுகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் ஜனாதிபதியின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் ஏனைய சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு குறித்த பகுதியிலிருந்து போராட்டகாரர்களை கலைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களினால் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையினர் அதனைத் தடுத்து நிறுத்தியதால் குழப்ப நிலை ஏற்பட்டது.
பேரணி காரணமாக பொலிஸார், இராணுவத்தினர் உட்பட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய தைப்பொங்கல் விழா இடம்பெறவுள்ள நல்லூர் பகுதியை சுற்றிலும் வீதிதடைகள் ஏற்படுத்தப்படுவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.