தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் முருகனின் டெல்லி இல்லத்தில், தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நடத்தப்பட்டது. பிரதமர் மோடி, ஆளுநர்கள் தமிழிசை மற்றும் சிபி ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக எம்எல்ஏ நயினார் நாகரேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது பேச்சை தொடங்கினார். “இந்தியா உலகின் பழமையான ஜனநாயகம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாயும்கூட. இதற்குப் பல வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. ஒரு முக்கியமான குறிப்பு தமிழகத்தில் உள்ளது.
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூரில் கண்டெடுக்கப்பட் 1,100-1,200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் நாட்டின் ஜனநாயக மதிப்பீடுகள் குறித்த அம்சங்களை வெளிப்படுத்துகின்றன.அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு கிராம சபைக்கான உள்ளூர் அரசியலமைப்பு போன்றது. இதில் பேரவையை எப்படி நடத்த வேண்டும், உறுப்பினர்களை தேர்வு செய்யும் முறை எப்படி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, அந்த காலகட்டத்தில், ஒரு உறுப்பினர் எப்படி தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று சமீபத்தில் அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை குறிப்பிடும் விதமாக பேசினார்.
தொடர்ந்து, “ஒரு நாடாக, இந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வது நமது பொறுப்பு, ஆனால் இதற்கு முன்பு என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனினும், இப்போது எனக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், “உலகின் பழமையான மொழி தமிழ் என்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும். சென்னையிலிருந்து கலிபோர்னியா வரை, மதுரையில் இருந்து மெல்போர்ன் வரை, கோயம்புத்தூரில் இருந்து கேப் டவுன் வரை, சேலத்தில் இருந்து சிங்கப்பூர் வரை என உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் தமிழர்களை காணலாம். எந்த நாடுகளுக்குச் சென்றாலும், தமிழர்கள் தங்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களையும் எடுத்துச் செல்கிறார்கள். அதனால்தான் பொங்கலாகட்டும், புத்தாண்டாகட்டும், தமிழ் பண்டிகைகள் உலகம் முழுவதும் கொண்டாப்படுகின்றன.
மன் கி பாத் நிகழ்ச்சியில் பலமுறை பல சாதனை செய்த தமிழர்களை பற்றி பேசி இருக்கிறேன். ஐ.நா. சபையில் தமிழ் மொழியைப் பற்றிக் குறிப்பிட்டேன். தமிழ் இலக்கியமும் அதிகமாக மதிக்கப்படுகிறது. தமிழரின் பண்பு குறித்து தமிழ்த் திரையுலகம் நமக்கு பல படைப்புகளை வழங்கி உள்ளது.
இலங்கையில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த முதல் இந்திய பிரதமர் நான்தான். இலங்கையில் உள்ள தமிழர்கள் உதவிக்காகக் காத்திருந்தனர், எங்கள் அரசாங்கம் அவர்களுக்காக நிறைய செய்தது. நான் யாழ்ப்பாணம் சென்றபோது, அங்கு தமிழர்களுக்காக இந்திய அரசால் கட்டப்பட்ட வீடுகளை ஒப்படைக்கபட்டன. வீட்டில் நுழையும் முன் பால் காய்ச்சும் பாரம்பரிய சடங்கு, அதில் நானும் கலந்துகொண்டேன்.
அதன் வீடியோக்கள் தமிழ்நாட்டில் வெளியானபோது தமிழ் மக்களிடம் இருந்து நான் நிறைய அன்பை பெற்றேன்.எனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் நடைபெற்ற “காசி-தமிழ் சங்கமம்” வெற்றிகரமாக நடத்தப்பட்டது. காசிக்கும் தமிழகத்துக்கும் பழமையான வரலாற்று தொடர்புகள் உள்ளன.
காசி நகரத்தில் உள்ள எந்தப் படகோட்டியிடம் பேசினாலும், அவருக்கு பல தமிழ் வாக்கியங்கள் தெரியும். காசி தமிழ் சங்கமத்தில், ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தமிழ் புத்தகங்கள் வாங்கப்பட்டதும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் இருக்கை நிறுவப்பட்டதும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தமிழகம் மற்றும் தமிழர்கள் குறித்தும் பிரதமர் மோடி நெகிழ்ந்து பேசினார்.