இலங்கை இராணுவம் உலக நாடுகளின் பேருதவியோடு 2009ஆம் ஆண்டு இலங்கையின் வடக்கில் முல்லை மாவட்டத்தின், முள்ளிவாய்க்கால் பகுதியில் மேற்கொண்ட தமிழ்த் தேசிய இனம் மீதான அதி உச்ச அழிப்பின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில், ஈழத்தமிழர் மக்களவை, தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு ஆகியன ஒன்றிணைந்து யேர்மனியின் நான்கு (04) பிரதான பெரு நகரங்களில் உணர்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நான்கு நகரங்களில் ஒன்றான, யேர்மனிய மத்திய மாநில ஆளுகைக்குட்பட்ட “டுசில்டோர்வ்” நகரிலே பாராளுமன்ற அமைவிடத்திற்கு முன்பாகவுள்ள “லான்ராக்” நினைவுத் திடலில் நிகழ்வுகள் யாவும் மிகவும் உணர்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
ஆரம்பத்தில் பி.ப 2.30 மணியளவில் டுசில்டோர்வ் நகர பிரதான பேரூந்து நிலையத்திற்கு அருகாமையிலிருந்து மக்கள் பேரணியாக வலிசுமந்த கோசங்களை எழுப்பியபடி, பி.ப 4.15 மணியளவில் நினைவுத் திடலினை வந்தடைந்ததும் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமாயின.
பொதுச்சுடரேற்றல், ஈகைச்சுடரேற்றல், பொதுப்படங்களுக்கான மலர்மாலை அணிவித்தல், மலர், சுடர் வணக்கம், அகவணக்கம் என்பன இடம்பெற்றது.
அவற்றைத் தொடர்ந்து கவி வணக்கம், இசை வணக்கம், வலியுணர்த்தும் நடனம், தமிழ் மற்றும் வாழ்விட மொழியிலான உரைகள் என்பன இடம்பெற்றதுடன் தமிழ் இளையோர் அமைப்பின் உறுதியுரையும் இடம்பெற்று நிகழ்வுகள் நிறைவுபெற்று, இறுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுடனான உப்புக்கஞ்சியும் வழங்கப்பெற்றது.
புலம்பெயர் தாயக மக்கள், குர்திஸ்தான் மக்கள் பிதிநிதிகள், இடதுசாரிக் கட்சி உறுப்பினர், அருட் தந்தையரென பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை தொடர்பான புகைப்பட காட்சிப்படுத்தல்கள், வாழ்விட மொழியிலான துண்டுப் பிரசுரங்கள் வழங்கல் என்பன தமிழ் இளையோரால் முன்னெடுக்கப்பட்டது.