ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் இன்று(22) பகல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இதில் கலந்துகொண்டிருந்தார்.
சர்வ கட்சி அரசாங்கத்திற்கான வேலைத்திட்டம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதியால் எதிர்க்கட்சித் தலைவரிடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எனினும், அதனை நிராகரித்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமது கட்சி அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் சர்வ கட்சி அரசாங்க வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவிகளை பெற்று மக்களின் செலவீனங்களை அதிகரிப்பதற்குப் பதிலாக அரசாங்கத்தின் நியாயமான முன்மொழிவுகளுக்கு ஆதரவளிப்பதாகவும் அரசாங்கத்தின் மக்கள் விரோத வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் விமர்சிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது கூறியுள்ளார்.