வடக்கு-கிழக்கில் வாழும் மக்களுக்கு புலம் பெயர்ந்த உறவுகள் பாரிய உதவிகளை செய்து வருவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை அரசு உரிய முறையில் வழங்காது ஏமாற்றி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரித்தானியாவில் வாழும் பலம்பெயர் உறவு ஒருவரால் வன்னி மாவட்டத்தில் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதியை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் மன்னாரில் உள்ள ரெலோ அலுவலகத்தில் இடம்பெற்றபோது கருத்து தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறினார்.
கொரோனா தொற்று காரணமாக நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு அரசாங்கம் 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும், உலர் உணவு பொருட்களை வழங்குவதாகவும் கூறி ஏமாற்றுகின்ற நிலையில் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மக்கள் இலங்கை அரசாங்கத்திடம் கையேந்தக் கூடாது என்பதற்காக புலம் பெயர்ந்த உறவுகள் பாரிய உதவிகளை செய்து வருகின்றனர்.
அதே போல் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சார்பாக பிரித்தானியாவில் வாழும் நண்பரிடம் கோரிக்கை விடுத்த நிலையில் வன்னி மாவட்டத்தில் 5 ஆயிரம் குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
அதன் ஆரம்ப பணிகளை ஆரம்பித்துள்ளோம்.
அவருக்கு நாங்கள் நன்றி கூற வேண்டும்.
பாரிய நிதி உதவியை வழங்கி ஏழை மக்களினுடைய பசியை போக்க ஒரு தர்மத்தை செய்துள்ளார்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சார்பாகவும் வன்னி மாவட்ட மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.எமது மக்கள் அரசிடம் கையேந்தும் நிலையை மாற்ற புலம் பெயர்ந்த உறவுகள் எம் மக்களுக்கு கை கொடுக்க வேண்டும்.
நாட்டில் பயணத்தை ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சமூர்த்தி பெற்றுக்கொள்ளும் குடும்பங்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தெரிவித்திருந்தனர். ஆனால் சமூர்த்தி பெற்றுக்கொள்ளுகின்றவர்களுக்கு மாத்திரமே குறித்த 5 ஆயிரம் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளது.
ஏனைய பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை.
அரசாங்கத்தினால் உரிய திணைக்களங்களுக்கு வழங்கப்படவில்லை.
அந்த வகையில் அரசாங்கம் பாதீக்கப்பட்ட மக்களை ஏமாற்றியுள்ளது.
அன்றாட கூலித் தொழிலை மேற்கொள்ளுகின்றவர்களின் குடும்பங்கள் பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்நிலையிலே அனைத்துக் கட்சிகளும் இணைந்து புலம் பெயர் மக்களின் உதவிகளுடன் நிவாரண உதவியை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அரசாங்கம் தவறான கருத்துக்களை கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம்.
என அவர் மேலும் தெரிவித்தார்.