இலங்கையின் சுதந்திர தினமான நாளை சனிக்கிழமை தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு முழுவதும் பூரண கடையடைப்பு போராட்டத்துக்கு யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தைக் கரிநாளாக பிரகடனப்படுத்தியும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பேரணி இடம்பெறும் என்று மாணவர்கள் ஏற்கனவே அறிவித்த நிலையில் தற்போது பூரண ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
பேரணிக்கு வலுவூட்டியும் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாகக் கடைப்பிடிக்க வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள்.
இந்தச் சந்திப்பில் மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் ஹர்த்தாலுக்கான அழைப்பை விடுத்தார்.
பெப்ரவரி 4ஆம் திகதி கடைகள், வர்த்தக நிலையங்களைப் பூட்டியும், போக்குவரத்து சேவைகளை நிறுத்தியும் பூரண ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்புக் கொடிகளை கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்துவதுடன் பேரணியில் பங்கேற்று வலுச் சேர்க்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.