வடக்கு – கிழக்கு தழுவிய கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

இன்று யாழ்ப்பாணத்திலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சி தலைவர்களும் பிரதானிகளும் அதேபோன்று தமிழ் அரசுக் கட்சியினுடைய தலைவரும் ஒன்று கூடி வருகின்ற 25ஆம் தேதி வடக்கு கிழக்கு தழுவிய பாரிய கதவடைப்பு போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு மக்களுக்கு அறைகூவல் விடுப்பதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை எதிர்த்து அதே போன்று தொல்லியல் நடவடிக்கைகளினாலே எங்களுடைய பூர்வீகத்தை அழித்தொழிக்கின்ற அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இந்த கதவடைப்பு போராட்டத்தை நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.

இது சம்பந்தமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முதல் யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ் தேசிய கட்சிகள் மதத் தலைவர்கள் சமூக அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி இதற்கான எதிர்ப்பு போராட்டம் என்று நடத்துவதாக முடிவு எட்டப்பட்டிருந்ததது. எதிர்வரும் 24ஆம் தேதி இந்த போராட்டம் நடத்தப்படலாம் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அது இறுதி முடிவாக இருக்கவில்லை.

இன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்வரும் 25ஆம் தேதி வடக்கு கிழக்கு தழுவிய கதவடைப்பு போராட்டத்தை நடத்துவதாக கட்சி தலைவர்கள் தீர்மானத்தை எட்டி உள்ளனர். இதற்கு அனைத்து சமூக அமைப்புக்கள் மதத்தலைவர்கள் பொது அமைப்புகள் அனைவருடைய ஆதரவையும் கோரியுள்ளார்கள். பாராளுமன்றத்திலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படுகின்ற பொழுது பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கு அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.