தொழில்நுட்ப வல்லுனர்களை செவிமடுப்பதற்கு பதில் இலங்கை அதன் மக்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதை செவிமடுக்கவேண்டும் என உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் பேராசிரியர் சாந்த தேவராஜன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் கருத்துக்களிற்கு செவிமடுக்காத பட்சத்தில் தேசிய பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்காக தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் ஆலோசனை குழுக்களை அமைப்பதிலும் செயலணிகளை அமைப்பதிலும் கவனம் செலுத்தினார்கள் ஆனால் இந்த நடவடிக்கைகள் மக்கள் எதிர்கொண்டுள்ள உண்மையான பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு உதவவில்லை சவால்களிற்கு தீர்வை காண்பதற்கு உதவவில்லை என தெரிவித்துள்ள அவர் மக்களின் குரல்கள் புறக்கணிக்கப்பட்டமையே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக பொருளாதார பிரச்சினை இலங்கையில் தொழில்நுட்ப பிரச்சினையாக பார்க்கப்படுகின்றது திறமைசாலிகளை தெரிவு செய்து அவர்களை ஒரு அறையில் இருக்கiவைத்தால் அவர்கள் மிகச்சிறந்த பொருளாதார கொள்கைகளை வகுப்பார்கள் என்ற சிந்தனை காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ள சாந்ததேவராஜன் இதுவே பிரச்சினை எனவும் தெரிவித்துள்ளார்.
மக்களை உண்மையில் செவிமடுக்கும் கொள்கை உருவாக்கல் நடைமுறைகள் அவசியம் மக்கள் முக்கியமான சில விடயங்களை தெரிவிக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப வல்லுனர்களின் கொள்கை தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முயல்வதன் காரணமாக யதார்த்தத்தையும் பொதுமக்களின் உண்மையான பிரச்சினைகளையும் தொடர்புபடுத்த முடியாத புரிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக வங்கி சர்வதேச நாணயநிதியம் போன்றவற்றுடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்வது அவசியம் அதேவேளை பொதுமக்களை கலந்தாலோசிப்பதும் அவசியம் ஆனால் அவ்வாறான நடவடிக்கைகளில் எவரும் ஈடுபடப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2023 வரவு செலவுதிட்டம் மக்களின் மக்களின் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டமைக்கான சிறந்த உதாரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.