வருகையை பிற்போடுமாறு வௌிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்திருந்தாலும் சீனாவின் அதி தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் தற்போது வேகத்தை அதிகரித்துக்கொண்டு ஹம்பாந்தோட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.
கப்பல் எதிர்வரும் வியாழக்கிழமை (11) ஹம்பாந்தோட்டையை அடையவுள்ளது.
செய்மதிகள் மற்றும் ஏவுகணைகளை கண்காணிக்க முடியுமான வசதிகள் கொண்ட சீனாவின் Yuan Wang 5 கப்பல் இன்று பிற்பகல் இலங்கையில் இருந்து 680 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்தது. மணித்தியாலத்திற்கு 14 கடல் மைல் வேகத்தில் அந்நேரத்தில் கப்பல் பயணித்துக்கொண்டிருந்தது. இதற்கு முன்னர் இந்த கப்பல் மணித்தியாலத்திற்கு 10 முதல் 13 கடல் மைல் வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது.
தமது பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் நிலவுவதாக தெரிவித்து சீனாவின் இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பயணிப்பதை இந்தியா கடுமையாக எதிர்த்ததுடன் இந்த கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு நேற்று வௌிவிவகார அமைச்சு சீனாவிற்கு அறிவித்திருந்தது.
இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதாக சீனா ஜூன் 28 ஆம் திகதி அறிவித்ததுடன், ஜூலை 12 ஆம் திகதி வௌிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி, ஜூலை 14 ஆம் திகதி இந்த கப்பல் அங்கிருந்து புறப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏவுகணை கண்காணிப்புகளை மேற்கொள்ள முடியுமான சீனாவின் உற்பத்தியான பாகிஸ்தானின் யுத்த கப்பல் ஒன்றும் 12 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
PNS Taimur என்ற இந்த யுத்த கப்பல் தனது கன்னிப் பயணத்தில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே கொழும்பிற்கு வரவுள்ளது.
கம்போடியா மற்றும் மலேசியாவிற்கு அண்மித்த பகுதியில் யுத்த பயிற்சிகளில் ஈடுபட்ட பின்னரே இந்த கப்பல் வருகைதரவுள்ளது.
பாகிஸ்தானின் கப்பல் இந்தியாவிற்கு மிக அண்மித்த நாடான பங்களாதேஷின் சிட்டகாங் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி கோரியிருந்த போதிலும் அவர்கள் அதற்கு அனுமதி வழங்கியிருக்கவில்லை.
பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசீனாவின் தந்தை பாகிஸ்தானின் உதவியுடன் செயற்படுத்தப்பட்ட குழு ஒன்றினால் 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொலை செய்யப்பட்டமையே பங்களாதேஷ் இதனை நிராகரித்தமைக்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆகஸ்ட் மாதம் முழுவதும் அங்கு துக்க மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் அதி தொழில்நுட்ப ஆய்வு மற்றும் கண்காணிப்புக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும் சீனாவின் உற்பத்தியான பாகிஸ்தானின் யுத்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கும் ஒரே நேரத்தில் வந்தடையவுள்ளது.
இலங்கையின் பூகோள அமைவிடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனினும், நாட்டை நிர்வகித்தவர்கள் எடுத்த தவறான தீர்மானங்கள் காரணமாக இன்று நாடு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
காலத்திற்கு காலம் எடுத்த சந்தர்ப்பவாத தவறான தீர்மானங்கள் காரணமாக உலகில் அரசியலில் பலம் பொருந்திய இரண்டு நாடுகளுக்கு இடையில் சிக்கியுள்ளது.