வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் மீள ஆரம்பமானதன் பின் அரச அச்சகத்திற்கு பாதுகாப்பு – பொலிஸ்

அரச அச்சகத்தினால் பாதுகாப்பு கோரப்பட்டுள்ள போதிலும் , தற்போது வாக்கு சீட்டு அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் மீண்டும் அப்பணிகள் ஆரம்பமானதன் பின்னர் உரிய நேரத்தில் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அரச அச்சகத்தினால் பொலிஸ் திணைக்களத்திடம் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எந்தவொரு தேர்தலுக்கும் பொலிஸ் திணைக்களத்தினாலேயே பாதுகாப்பு வழங்கப்படும். தேர்தல் ஆணையாளரின் ஆலோசனைக்கமையயே அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இந்நிலையில் அரச அச்சகம் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறிருப்பினும் நிதி நெருக்கடிகள் காரணமாக வாக்கு சீட்டு அச்சிடும் பணிகள் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே வாக்கு சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பமானதன் பின்னர் நாம் பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு பாதுகாப்பு வழங்கும் போது நீண்ட காலத்திற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த வேண்டியேற்படும். இதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை பிரத்தியேகமாக நியமிக்க வேண்டிய தேவையும் காணப்படுகிறது.

இவ்வாறான அரச நிறுவனங்களினால் கோரிக்கை விடுக்கப்படுகின்ற போதிலும் , கடமைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டிய பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை பொலிஸ் திணைக்களத்தினாலேயே தீர்மானிக்கப்படும். எனவே இந்தக் காரணிகள் தொடர்பில் ஆராய்ந்து பாதுகாப்பினை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.