வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற இளங்கலை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடிதம் மூலம் நேற்று (31.10.2022) பிரதமரிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற இளங்கலை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குமாறு நான் பலமுறை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். இந்த விடயம் கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேற்குறிப்பிட்ட விடயத்தில் நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட சாதகமான முடிவு அனைவராலும் வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டுக்குரியதாகும்.
இந்த முடிவு இளைஞர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தருணத்தில் இந்த தீர்வை நான் சரியானதாகவே பார்க்கிறேன்.
இந்த முடிவை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.