உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோருவதில் தேர்தல்கள் ஆணைக்குழு முறையான சட்ட நடைமுறைகளை பின்பற்றாவிட்டால், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களினால் செலுத்தப்பட்டுள்ள கட்டுப்பணத்தை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட கணக்கிலிருந்து செலுத்த நேரிடும் என சட்ட நிபுணர்கள் குழுவொன்று அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கிடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதியிடம் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனு கோரலுக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவினால் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட வேண்டும்.
தெரிவத்தாட்சி அலுவலர்கள், உதவி தேர்தல் ஆணையாளர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரை அழைத்து கலந்துரையாடல்களை முன்னெடுக்காமல், தேர்தல் தொடர்பான எந்தவொரு அறிவித்தலையும் வெளியிட முடியாது என்றும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் தேர்தல் ஆணைக்குழு கடந்த டிசம்பர் 21 ஆம் திகதி இறுதியாக இந்த அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடியுள்ளது.
அதன் பின்னர் இதுவரையில் அவர்கள் மேற்குறிப்பிட்ட குழுவினரை சந்திக்கவில்லை என்பதும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரியவந்துள்ளது.
இது சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துவதில் பாரதூரமான தாக்கத்தை செலுத்தும் என்றும் குறித்த சட்ட நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழு இவ்வாறு முறையான சட்ட முறைமைகளை பின்பற்றாவிட்டால், தேர்தலை சட்ட ரீதியாக நடத்துவதில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தற்போது வேட்புமனு தாக்கல் கோரப்பட்டுள்ளது. அதற்கமைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களால் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு செலுத்தப்படும் கட்டுப்பணம் தேர்தல் செயலாளர் அலுவலகத்தினால் திறைசேரிக்கு அனுப்பப்படும்.
ஆனால் தேர்தல் ஆணைக்குழு வழமைக்கு மாறாக வேட்புமனு கோரியுள்ளதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள்செலுத்திய கட்டுப்பணத்தை தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் தமது தனிப்பட்ட கணக்கிலிருந்து செலுத்த வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.