இந்தியாவின் 100 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் சூரிய களத்தின் ஊடான மின்உற்பத்தி திட்டம் எதிர்வரும் மே மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மின்சக்தி துறையை இந்தியாவிற்கு விற்பதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இம்மாதம் மேற்கொள்ளப்பட்ட விலை திருத்தத்திற்கமைய வீட்டுப்பாவனை உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கான கட்டணம் 23.4 சதவீதத்தினாலும், தொழிற்சாலைகள் மற்றும் ஹோட்டல்களுக்கான கட்டணம் 18 சதவீதத்தினாலும், பொது சேவைகளுக்கான கட்டணம் 22.3 சதவீதத்தினாலும், மத வழிபாட்டு தலங்களுக்கான கட்டணம் 32.6 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவற்றுக்கான கட்டண அதிகரிப்பு 12 – 18 சதவீதமாகவே காணப்பட்டது. எனவே அதிகரிக்கப்பட்டதை விட அதிகமாகவே கட்டணக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மின் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போது ஓமல்பே சோபித தேரர் போன்றோர் கட்டணத்தை செலுத்தாமல் இருக்குமாறு கூறியதோடு, தாம் கட்டணத்தை செலுத்தப் போவதில்லை என்றும் குறிப்பிட்டனர். ஆனால் பொது மக்கள் அவ்வாறு கட்டணம் செலுத்துவதை புறக்கணிக்கவில்லை. அதற்கு நன்றி கூறுகின்றோம்.
எரிபொருள், நிலக்கரி, நீர் மின் உற்பத்திகளுக்கு அப்பால் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மின் உற்பத்தியிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அதற்கமைய இந்தியாவின் 100 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் தேசிய பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், பொலிஸ், இராணுவ முகாம்கள் என்பவற்றில் சூரிய களத்தின் ஊடாக 9000 மெகாவோல்ட் மின் உற்பத்தி திட்டத்தை மே மாதத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதே போன்று சூரிய மற்றும் காற்றாலை ஊடான 10 மின் உற்பத்தி திட்டங்களுக்கான விலைமனுக்கள் எதிர்வரும் மாதங்களில் கோரப்படவுள்ளன. மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்கான விலைமனு கோரல் அறிவிப்புக்கள் அடுத்தவாரம் வெளியிடப்படவுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளதைப் போன்று மின்சக்தி துறையை இந்தியாவிற்கு விற்பதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை.