13ஆவது திருத்த சட்டம் தேவையில்லாத ஒன்று – மகிந்த ராஜபக்ஷ

13ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் என்று முன்னாள் ஜனாதிபதியும் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று கண்டியில் செய்தியாளர்களை மகிந்த ராஜபக்ஷ சந்தித்தார். இதன்போது, அவரிடம் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மகிந்த, அவ்வாறான (13ஆவது திருத்தம்) ஒரு சட்டம் அவசியம் என்று தற்போதைய அரசாங்கம் நம்பினாலும் சிறீலங்கா பொதுஜன பெரமுன அதே கருத்தை கொண்டி ருக்கவில்லை – இது (13) தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் – என்று கூறினார்.

மக்களின் உரிமைகளை நிலைநாட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டியது அவசியம். மக்களின் தேவைகளை தீர்மானிக்கும் ஒரேவழி தற்போதைய நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் கடமை. எவ்வாறாயினும் அரசிடம் நிதி இல்லாவிட்டால் தேர்தலையும் நடத்த முடியாது.

எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க எமது கட்சி தயாராக இருக்கிறது. நாம் வெற்றிபெறுவோம் என்பது தெரியும். இதனால்தான் நான் ஜனாதி பதியாக இருந்த காலத்தில் ஒரு தேர்தலையும் தாமதப்படுத்தவில்லை. தற்போதைய அரசாங்கம் வெற்றி பெறுமா இல்லையா என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளதால் தேர்தலும் நிச்சயமற்று உள்ளது – என்றும் கூறினார்