13ஐ அமுல்படுத்த கோருவது சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை ஒருபோதும் பாதிக்காது: விக்னேஸ்வரன்

I13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்த கோருவது ஒருபோதும் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை பாதிக்காது என்றும் மாறாக உரிமைக்கான போராட்டத்தை பலப்படுத்தும் என்றும் பாராளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் உங்கள் கட்சி முன்வைத்த விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சர்வதேச சமூகத்தினால் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் ஊடாகவே பெறப்படவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால், தற்போது 13 ஆவது திருத்த சட்டத்தின் அடிப்படையில் தீர்வினைப் பெறும் முயற்சிகளை நீங்கள் முன்னெடுத்திருப்பது ஏன்? என்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளித்துள்ள பதிலிலேயே விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மிகவும் சுருக்கமாக இந்த கேள்விக்கு நான் பதில் அளிக்கின்றேன். 13 ஆவது திருத்த சட்டத்தை ஒரு தீர்வாக நாம் ஏற்றுக்கொண்டுவிட்டதாக விஷமத்தனமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இது தொடர்பில் நான் முன்னரும் மிகவும் தெளிவாக எனது நிலைப்பாட்டை கூறியிருக்கின்றேன். எங்களுடன் சேர்ந்து பல தமிழ்க் கட்சிகள் அண்மையில் கூடி 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியாவை வலியுறுத்துவதற்கு எடுத்த தீர்மானத்துக்கும் எமது அரசியல் தீர்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏற்கனவே இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இருக்கும் ஒருசில சாதகமான விடயங்களை எமது தற்பாதுகாப்புக்காக பயன்படுத்துவதற்கு முயலும் ஒரு நடவடிக்கையே இது. இதனை நான் தற்போது மட்டும் கூறவில்லை. நான் முதலமைச்சராக இருந்தேபோதே, 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் பொலிஸ் மற்றும் காணி அதிகாரம், முதலமைச்சர் நிதியம் ஆகியவை தரப்படவேண்டும் என்று பல தடவைகள் வலியுறுத்தி இருந்தேன். நில அபகரிப்பு, போரின் பின்னைய வறுமை, சமூக சீர்கேடு, இராணுவ மயமாக்கல் ஆகியன காரணமாக ஆபத்தின் விளிம்பில் இருக்கும் எமது தேசத்தைப் பாதுகாப்பதற்கு சில நடவடிக்கைகளை நாம் அவசரமாக முன்னெடுக்க வேண்டியுள்ளது. “தீர்வு வரும், தீர்வு வரும்” என்று நாம் காலத்தை இழந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் நாம் எமது தேசத்தை இழந்துகொண்டிருக்கின்றோம் என்பதே உண்மை. ஆகவே தான் நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வினை நாம் பெற்றுக்கொள்ளும்வரையில் இருப்பவற்றைப் பாதுகாப்பதற்கு ஏற்கனவே சட்டத்தில் இருக்கும் அதிகாரங்களை நாம் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று முயற்சிக்க வேண்டியுள்ளது.

தற்போது எமக்கு நாம் விரும்பும் ஒரு தீர்வினை பெற்றுக்கொள்ளும் காலம் கனிந்துவிட்டதாகவும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் 13 ஆவது திருத்த சட்டத்தை இதனால்த்தான் வலியுறுத்துகின்றோம் என்பதுபோலவும் உண்மைக்கு மாறான கருத்துக்கள் கூறப்பட்டுவருகின்றன. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான கடந்த 12 வருடங்களில் ஒவ்வொரு வருடமும் எமக்குத் தீர்வு வரும் என்ற நம்பிக்கையுடனேயே நாம் வாழ்ந்துவந்திருக்கின்றோம். யுத்தம் முடிவடைந்து மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டபோது அதில் நாம் போட்டியிட்டபோது கடும் எதிர்ப்புக்கள் எமக்கெதிராக முன்வைக்கப்பட்டன. மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது என்பது 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒரு தீர்வாக நாம் ஏற்றுக்கொண்டுவிட்டதாக அர்த்தப்படுத்தப்பட்டுவிடும் என்று சில கட்சிகள் எதிர்ப்புத்தெரிவித்தன. தேர்தலையும் புறக்கணித்தன. ஆனால், உண்மையான நிலைமை அப்படி இருக்கவில்லை. அன்றே, நாம் 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஒற்றுமையுடன் நடவடிக்கை எடுத்து இருந்தால், இன்று மிகவும் பலமான ஒரு நிலையில் இருந்திருப்போம். அந்த நிலையில் நின்று கொண்டு எமது நிரந்தரத் தீர்வுக்காகப் போராடியிருப்போம். இன்று எமது நிலை மிகவும் வருத்தத்திற்குரியதாக மாறியுள்ளது. இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும் மாகாண சபைத் தேர்தலைப் புறக்கணித்து வந்துள்ளார்கள். எந்தவகையிலும், 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக் கோருவது எமது சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வுக்கான கோரிக்கையை பாதிக்க முடியாது. ஆகவே, தவறுகளில் இருந்து நாம் பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

ர்வுக்கான எமது நடவடிக்கைகளும் ஒற்றையாட்சியின் கீழ் 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கான எமது முயற்சிகளும் வெவ்வேறானவை. அவை சாமாந்திரமானவை, ஒருபோதும் ஒன்றுடன் ஒன்று சந்திக்க முடியாதவை. 13 ஆவது திருத்த சட்டத்தின் கீழ் நான் முதலமைச்சராக இருந்திருக்கின்றேன். எமக்கு அமைச்சர்கள் இருந்தார்கள். பல நிறுவனங்கள் இருந்தன. ஆனால், இதற்காக எமது சுய நிர்ணயத்துக்கான கோரிக்கை ஒருபோதும் பாதிக்கப்படவில்லை. மாறாக, எனது பதவியைப் பயன்படுத்தி சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை நான் வலுப்படுத்தி இருக்கின்றேன். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு யாழ்ப்பாணத்தில் பொதுமேடையில் வைத்து நேருக்கு நேராகவே 13 ஆவது திருத்தம் ஒருபோதும் எமக்கு ஒரு தீர்வு அல்ல என்று கூறியிருக்கின்றேன். மாகாண சபை ஆட்சி அமைந்துவிட்டது என்பதற்காக தாயகத்திலும் சரி, புலம்பெயர் நாடுகளிலும் சரி எமது மக்கள் சுயநிர்ணயத்துக்கான கோரிக்கையையோ நடவடிக்கைகளையோ கைவிடவில்லை. 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டாலும் நிலைமை அதுதான்.

நாம் சட்டப் புத்தகத்தில் இருக்கும் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக் கோருவது நாளுக்கு நாள் எமது நிலைமை மோசமாகிக் கொண்டு வருவதைத் தடுக்கவே.

தமிழ் மக்களுக்கான நிறைந்த இறுதித் தீர்வு சர்வதேச சமூகத்தினால் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் ஊடாகவே நடைபெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. தமிழ் கட்சிகள் காலம் காலமாக சமஷ்டியை ஒரு தீர்வாக வலியுறுத்தி வருகின்றன. கூட்டு சமஷ்டியே நிரந்த தீர்வாக அமைய முடியும் என்பது எமது கூட்டணியின் நிலைப்பாடு. இதனை நாம் தீர்மானிக்க முடியாது. எமது மக்களே தீர்மானிக்க வேண்டும். அதனால்த்தான் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு நாம் கோரிக்கை முன்வைத்திருக்கின்றோம். இதனை இந்தியாவிடமும் நாம் வலியுறுத்தி உள்ளோம். மீண்டும் வலியுறுத்துவோம். ஆனால், சர்வஜன வாக்கெடுப்பு இன்று நடக்கும் , நாளை நடக்கும் என்று எதிர்பார்த்திருந்து எமது நிலத்தையும் மக்களையும் நாம் இழந்துவிடக்கூடாது. ஒவ்வொருநாளும் எமது நிலம் பறிபோகின்றது. பெருமளவில் எமது மக்கள் வெளியேறுகின்றார்கள். ஆகவேதான் ஏற்கனவே இருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி சில வலுவூட்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளோம்.

இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில், தமிழ்த் தேசத்தை இல்லாமல் செய்வதற்கான பாரிய திட்டங்களை அவர்கள் பல காலத்திற்கு முன்பிருந்தே வகுத்திருக்கின்றார்கள். தமது திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அவர்களின் மிக சிறந்த உத்தி, காலத்தைக் கடத்துவதுதான். காலங் கடத்தி சிறிது சிறிதாக வடகிழக்கை ஆக்கிரமிப்பதே அவர்களின் குறிக்கோள். கடந்த 12 வருடங்களில் சிறிய அதிகாரத்தைக் கூட எமக்கு வழங்காமல் காலத்தை இழுத்தடிப்பு செய்ததன் மூலமே எம்மை அவர்கள் பலவீனப்படுத்தி இருக்கின்றார்கள். வடக்கையும் கிழக்கினையும் புவியியல் ரீதியாகப் பிரிப்பதற்கும், முல்லைத்தீவை ஒரு அம்பாறை ஆக்குவதற்கும் அவர்களுக்கு இன்னமும் சிறிது காலம் மட்டுமே தேவைப்படுகின்றது. தமிழ் மக்கள் தம்மை தாமே பாதுகாப்பதற்கான அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள விடாமல் எவ்வளவுக்கு எவ்வளவு காலத்தை இழுத்தடிக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு தமிழ்த் தேசத்தை நிர்மூலம் செய்ய முடியும் என்பது அவர்களின் கணிப்பு. அதுதான் உண்மையும் கூட. புள்ளிவிபரங்கள் அதைத் தான் எடுத்துக் காட்டுகின்றன.
நாம் கோரிக்கை விடுவதால் இலங்கை அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்துவதற்கு இலகுவில் உடன்படப்போவதில்லை. ஆனால், இதனை அமுல்ப்படுத்துவதற்கு இலங்கையை நிர்ப்பந்திப்பதற்கான தகுதியும், உரிமையும், கடமையும் இந்தியாவுக்கு இருக்கின்றது. இந்தியாவிடம் நாம் இந்தக் கோரிக்கையை எந்தவிதமான கால வரையறையும் இன்றி திறந்ததாக (ழிநn) விடுக்கவில்லை. தமிழ்ப் பேசும் மக்களுக்கு இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமையினை தீவிரமாக கவனத்தில் எடுத்து, மிக விரைவாக 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
இந்த இடத்தில் எமது முஸ்லிம் சகோதரர்கள் பற்றியும் மலையகச் சகோதரர்கள் பற்றியும் ஒரு சில வாசகங்களை உள்ளடக்குவது உசிதம் என்று எனக்குப்படுகிறது. வடகிழக்கு முஸ்லிம் தலைவர்கள் சிலர் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் அது முஸ்லிம் மக்களுக்கு பாதகம் விளைவிக்கக் கூடும் என்று எண்ணுகின்றார்கள். இது தவறு. வடகிழக்கு முஸ்லிம் மக்கள் சிந்திக்க வேண்டிய ஒரேயொரு விடயம் தமது முஸ்லிம் அலகு தமிழ்ப் பேசும் பிரதேசமாக வடகிழக்கினுள் இருக்க வேண்டுமா அல்லது சிங்கள பெரும்பான்மையினர் வசம் இருக்க வேண்டுமா என்பது. சிங்களப் பெரும்பான்மையினர் வசம் சென்றால் தமக்கு என்ன நடக்கும் என்பதை முஸ்லிம் சகோதரர்கள் கடந்த சில வருடங்களுக்குள் உணர்ந்திருப்பார்கள். வடகிழக்கில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களை ஒன்று சேர்த்து சமஷ்டி முறையிலான முஸ்லீம் அலகின் கீழ்க் கொண்டு வருவது சிரமமல்ல. அதே போன்று மலையகத் தமிழ் மக்களும் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களை ஒன்று சேர்த்து சமஷ்டி முறையிலான மலையக தமிழர் அலகை ஸ்தாபிப்பது சிரமமல்ல. ஆனால் கிழக்கு மாகாண முஸ்லிம் சகோதரர்கள் சிங்கள அலகினுள் சென்றால் காலக்கிரமத்தில் தமிழ் மொழியானது அவர்களிடையே அழிந்து போகும். இஸ்லாம் மதமும் வெகுவாகப் பாதிக்கப்படும். இவற்றையெல்லாம் முஸ்லீம் தலைவர்களும் விடுதலைப் புலிகளும் கருத்துப் பரிமாறிய பின்னரே அவர்களுக்குள் ஒரு உடன்பாடு முன்னர் ஏற்பட்டது. எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு இஸ்லாமிய மக்கட் தலைவர்களும் மலையக மக்கட் தலைவர்களும் எம்முடன் சேர்ந்து ஒருவர்க்கொருவர் பலமாக இருப்பதே தற்போதைய அவசரமான தேவையாகும்.