13 ஐ அமுல்படுத்த வேண்டாம் என ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்

நாட்டின் சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் மகாநாயக்க தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

13ஆவது திருத்தத்தில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மற்றும் அது தொடர்பான விடயங்கள் வழங்கப்பட்டுள்ளமை நாட்டில் பிளவுகளுக்கு மேலும் வழி வகுக்கும் எனவும் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமானது நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தக் கூடும் என்பதை உணர்ந்து அதனை முழுமையாக அமுல்படுத்துவதில் இருந்து முன்னைய ஜனாதிபதிகள் அனைவரும் தவிர்த்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.