13 ஆவது அரசமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த மகா சங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்று களனிப் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளரும் பேராசிரியருமான வணக்கத்துக்குரிய பூஜ்ய இந்துரகரே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். நாரஹேன்பிட்டி அபயராம விகாரையின் தலைமை பிக்குவான வணக்கத்திற்குரிய முரத்தெட்டுவே ஆனந்த தேரரின் 80 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ உள்ளிட்டோர் பங்கேற்றனர். அங்கு தொடர்ந்து உரையாற்றிய வணக்கத்துக்குரிய இந்துராகரே தம்மரத்ன தேரர், 13 ஆவது அரசமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அதற்கு எதிராக நாளையே பிக்குகள் கிளர்ந்து எழத் தயாராக உள்ளனர்.
எனவே, 13 ஆவது அரசமைப்பு சட்டத்தைப் பற்றி விவாதித்தால், அதனையும் வைத்து அரசியல் புரிகின்றோம் என்று எம்மை அழைத்தாலும் பரவாயில்லை. புத்தரின் போதனைகளைப் பாதுகாத்து சம்புத்த பாடசாலையைக் கொண்ட ஒரே நாடு சிறிலங்கா. ஆகவே, அதனை இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக உடைத்தால் எமது நாடு தாங்காது என்றார்.