தற்போதைய வரிக் கொள்கையானது சாதாரண வரிக் கொள்கையன்றி மீட்பு நடவடிக்கை எனவும் இந்த செயற்பாடு சீர்குலைந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடுளை மேற்கொள்ள முடியாது நிலை மட்டுமன்றி எந்தவொரு நாட்டுடனும் கொடுக்கல் வாங்கல் செய்யும் வாய்ப்பை இலங்கை இழக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சாதாரண வரவு செலவுத் திட்டம் அல்ல எனவும், பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இன்று (21) நடைபெற்ற 2023 வரி மாநாட்டில் ஆரம்ப உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை வர்த்தக சம்மேளனம் தவிர்ந்த எந்தவொரு கட்சியோ, நபரோ அல்லது நிறுவனமோ சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்மொழிவுகளையோ மாற்று வழிகளையோ சமர்ப்பிக்கவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டவுடன் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அதனை நிறைவேற்றவோ அல்லது நிராகரிக்கவோ வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி அதனை நிராகரிப்பதாக இருந்தால் சம்பந்தப்பட்ட தரப்பினர் சர்வதேச நாணய நிதியத்திற்கு மாற்று யோசனைகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
எமது நாட்டின் பிரதான கடன் வழங்குநர்களான பாரிஸ் கிளப், இந்தியா மற்றும் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு செயற்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி , இலங்கைக்கு நிதி ஒத்துழைப்பு வழங்குவதற்கு பாரிஸ் கிளப் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும், இந்தியா தமக்கு தனித்துவமான முறையை பின்பற்றுகிறது.
எவ்வாறாயினும், எதிர்வரும் 23ஆம் திகதி இந்தியாவின் பெங்களூரில் நடைபெறவுள்ள ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் அவர்களின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.