6 மாதங்களுக்கான பொருளாதார அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது – அஜித் நிவாட் கப்ரால் 

இலங்கையில் எதிர்வரும் 6 மாதங்களுக்கென பொருளாதார அபிவிருத்தித் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித் நிவாட் கப்ரால் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர், ”எதிர்வரும் 6 மாதங்களை இலக்காகக் கொண்டு பொருளாதாரத்திற்கான திட்டப் பாதையொன்றை ஒக்டோபர் முதலாம் திகதி வெளியிட தயாராகியுள்ளோம். அனைத்து முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கியதாக அது இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த அஜித் நிவாட் கப்ரால், கடந்த 15 ஆம் திகதி மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்றார்.
அவர் மத்திய வங்கிய ஆளுநராக பதவியேற்ற பின்னர் 2021 வருட இறுதியில் இலங்கையின் பொருளாதாரத்தில் 5 சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்று ஊடங்களுக்கு கூறியிருந்தார்.
இதேவேளை, இவரின் கையொப்பத்துடன் கடந்த 17 ஆம் திகதி புதிதாக 45.95 பில்லியன் ரூபா நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.