ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட தூதுக் குழுவினர் சிறிலங்காவுக்கு விஜயம் செய்துள்ள சந்தர்ப்பத்தில் பிரதான பத்திரிகைகளின் ஆசிரியர்களை விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைத்திருக்கும் சம்பவத்தினால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீள இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட தென்னிலைங்கையின் பிரபல சட்டத்தரணியான லால் விஜேநாயக்க, பயங்கரவாத தடைச் சட்டமும் சர்வதேச தரத்திற்கு மாற்றுவதை அரசாங்கம் இழுத்தடிப்பதாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஜனநாயகத்தை பாதுகாத்தல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நாட்டின் தொழிலாளர்களின் உரிமையை பாதுகாப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வாக்குறுதியளித்திருந்தது.
எனினும் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் இந்த சலுகை நிறுத்தப்பட்டதோடு நல்லாட்சி அரசாங்கம் மீண்டும் பல வாக்குறுதிகளை அளித்து மீளப்பெற்றுக்கொடுத்தது. பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றுதல் உள்ளிட்ட பல விடயங்கள் இந்த வாக்குறுதிகளில் உள்ள நிலையில் அவற்றை மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றும்படி தெரிவிக்கப்பட்டதோடு அவற்றின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்கே விசேட குழு விஜயம் செய்துள்ளது.
பயங்கரவாத் தடைச் சட்டம் உலகின் பல நாடுகளிலும் உள்ளது. மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காக இது பயன்படுத்தப்படுகின்றது. எனினும் போர்க்காலத்திலிருந்து இந்த சட்டம் எமது நாட்டில் நடைமுறையில் இருந்து வருகின்றது. உலகம் ஏற்றுக்கொண்ட ரீதியாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இலங்கையிலும் நடைமுறைப்படுத்தும் வகையிலான வரைபு தயாரிக்கப்பட்ட போதிலும் அது இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு தற்சமயம் இலங்கையில் இருக்கின்ற நிலையில்தான் இரண்டு பிரதான சிங்களப்பத்திரிகை நிறுவனங்களின் ஆசிரியர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆகவே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்கு இப்படியான சம்பவங்கள் பாரிய தாக்கத்தை செலுத்தும். எனவே சலுகையை தக்கவைத்துக்கொள்ள இதுபோன்ற சம்பவங்கள் மீள்நிகழாமைக்கான வாக்குறுதியை சிறிலங்கா அரசாங்கம் சர்வதேசத்திற்கு மீண்டும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.