புலம்பெயர் உறவுகள் முதலீடு – அவர்களுக்கும், முதலிடும் பணத்திற்கும் பாதுகாப்பு மாகாணசபைகளுக்கான நிதி அதிகாரமே – ஜனா

எமது புலம்பெயர் உறவுகள் இங்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வருவார்களாயின் அவர்களுக்கு இங்கு பாதுகாப்பு வேண்டும். அதற்கும் மேலாக அவர்கள் முதலிடும் பணத்திற்கு இங்கு பாதுகாப்பு வேண்டும். அந்தவிதமான நிலைமை இங்கு உருவாக்கப்பட வேண்டும். மாகாணசபைகளுக்கான நிதி அதிகாரங்களே அதற்கான ஒரே வழி என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற உதவும் உறவுகள் அமைப்பின் 13வது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

2009க்குப் பின்னர் அழிக்கப்பட்ட நமது பிரதேசங்கள் தற்போது படிப்படியாக வளர்ச்சியுற்று வருகின்றது. ஆனால் நமது மக்களின் வாழ்வாதாரம் உயரவில்லை. புலம்பெயர் தேசத்திலே எமது மக்கள் பலர் பெரிய செல்வந்தர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் நினைத்தால் வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் இருக்கும் எமது மக்களின் வறுமையை ஒழிக்கலாம். நலிவுற்ற எமது மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தலாம். ஆனால், அவர்களுக்கு மனம் இருந்தாலும் அதற்கான களம் இல்லாமல் இருக்கின்றது.

தற்போது இந்த நாடு பெருளாதார ரீதியில் அதள பாதாளத்தில் தள்ளப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் புலம்பெயர் தேசத்திலே வாழும் எமது தமிழ் மக்களை இங்கு முதலீடுகளை மேற்காள்ளுமாறு இலங்கையின் ஆட்சியாளர்கள் அழைக்கின்றார்கள். இந்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சியினால் கொழும்பிலே காலி முகத்திடல் தொடக்கம் காலி வரை போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இன்றைய இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்பது ஒரு சிறு பிள்ளைக்குக் கூடத் தெரியும். அரசாங்கத்திற்கு அந்தக் காரணம் தெரிந்திருந்தும் அந்த அடிப்படைக் காரணத்தைப் புரிந்து கொள்ளாமல் புலம்பெயர் தமிழர்கள் டொலர் கொண்டுவர வேண்டும் என்று கூறுகின்றார்கள்.

இந்த நாட்டின் பொருளாதாரம் இந்த நிலைக்குச் செல்வதற்கு அடிப்படைக் காரணமே இந்த நாட்டில் தமிழ் மக்கள் இரண்டாந்த தரப் பிரஜைகளாகக் கணிக்கப்பட்டது தான். இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து சிங்களம் மட்டும் சட்டம், தரப்படுத்தல் போன்றவற்றினால் தமிழர்கள் ஒடுக்கப்பட்டனர். தமிழர்களின் அகிம்சைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியது. நாங்கள் எங்களது உரிமைகளைப் பெறுவதற்காக ஆயுதம் ஏந்தினோம். தமிழர்களின் போராட்டத்தின் யாதார்த்தத்தை உணர விரும்பாத மாறி மாறி வந்த பேரினவாத அரசாங்கங்கள் அந்தப் போரினை உக்கிரப்படுத்துவதற்காக யுத்தக் கருவிகள், போர் விமானங்கள், யுத்தக் கப்பல்கள் என்பவற்றுக்காக பலவாறாகச் செலவிட்டார்கள்.

அத்துடன், மஹிந்த ராஜபக்சவின் காலத்திலே ஊழல் நிறைந்திருந்தது உண்மைதான். ஆனால் அதற்கும் மேலாக பொருளாதாரத்தின் இந்த நிலைக்கு அடிப்படைக் காரணம் போருக்காகச் செலவழித்த பணம் தான் என்பதை இவர்கள் எற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

எமது புலம்பெயர் உறவுகள் இங்கு முதலீடுகளை மேற்கொள்வதற்குத் தயாராக இருக்கின்றார்கள். அவ்வாறு முதலீடுகளை மேற்கொள்பவர்களுக்கு இங்கு பாதுகாப்பு வேண்டும். அதற்கும் மேலாக அவர்கள் முதலிடும் பணத்திற்கு இங்கு பாதுகாப்பு வேண்டும். அந்தவிதமான நிலைமை இங்கு உருவாக்கப்பட வேண்டும்.

இன்று 21வது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வர எத்தணிக்கின்றார்கள். இதற்கு முன்னர் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தில் உள்ள சரத்துகளே இங்கு முழுமையாக அழுலாக்கப்படவில்லை. காணி, பொலிஸ் அதிகாரங்கள் இன்னும் மாகாணசபைகளுக்கு வங்கப்படாமல் குறித்த அரசியலமைப்பையே இந்த அரசாங்கங்கள் மீறியுள்ளன. இவ்வாறான நிலைமையில் எமது புலம்பெயர் உறவுகள் எந்த நம்பிக்கையில் முதலீகளைக் கொண்டு வருவாhர்கள்.

21வது திருத்தச் சட்டத்தில் 13வது திருத்தச் சட்டத்தில் உள்வாங்கப்பட்ட சரத்துக்கள் பூரணப்படுத்தப்படுவதோடு, மாகாணங்களுக்கு நிதி அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் என்பதை இன்று நாங்கள் வலியுறுத்துகின்றோம். இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கேட்க வேண்டும். தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகளின் பிரதிநிதிகளும் கேட்க வேண்டும். மாகாணங்களுக்கு நிதி அதிகாரங்கள் இருக்குமாக இருந்தால் புலம்பெயர் உறவுகள் அந்த அந்த மாகாண அரசுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டு இங்கு முதலீடுகளை மேற்கொள்ள முடியும். ஏனெனில் புலம்பெயர் தேசங்களிலே தமிழர்கள் மாத்திரம் செல்வந்தர்களாக இல்லை. சிங்கள மக்களும் அங்குள்ளார்கள். அவர்களும் அவரவர் மாகாணங்களில் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் இந்த நாட்டிற்கு டொலர்கள் வருவதற்கான சாத்தியக் கூறுகள் நிறைவே இருக்கின்றன.

அரசும் அரசை எதிர்த்து இன்று போராடும் போராட்டக்காரர்களும் இன்றைய இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்ன என்பதைத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். அதனைத் தீர்ப்பதற்காக முதலாவதாகப் பாடுபட வேண்டும். அதன் மூலம் தான் இந்த நாட்டில் தற்போதைய இடைக்கால பொருளாதார மீட்சிக்கு அப்பால் ஒரு நிரந்தரமான அமைதியை, பொருளாதார வளர்ச்சியைக் கட்டியெழுப்ப முடியும்.

கடந்த பாராளுமன்ற அமர்வின் போது சரத் வீரசேகர அவர்கள் குறுந்தூர் மலையிலே விகாரை அமைத்தல் தொடர்பில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மிகவும் ஆவேசமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அவர்களது பெயரைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். சிங்களவர்களது பொறுமைக்கு எல்லையுண்டு என்று தெரிவித்திருக்கின்றார். கொழும்பிலே அதிகூடிய வாக்குகளைப் பெற்றவர் இன்று கொழும்பு வீதியிலே நடமாட முடியாமல் இருக்கின்றார். சிங்கள மக்களின் பொறுமை தொடர்பில இவர் கருத்துரைக்கின்றார்.

பௌத்த அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பௌத்தர்கள் இல்லாத இடங்களில் விகாரைகள் அமைவதுதான் எங்களுக்குப் பிரச்சனை. இலங்கையிலே எத்தனை இடங்களில் இந்து அடையாளங்கள் இருக்கின்றன. அநுராதபுரம், பொலநறுவை போன்ற இடங்களிலே எத்தனையோ இந்து மன்னர்கள் வாழ்ந்த அடையாளங்கள், எச்சங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் இந்துக் கோயில்கள் கட்டப்படுகின்றனவா? இல்லை. அவைகள் மரபுரிமைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன. அவ்வாறு பௌத்த அடையாளங்கள் பாதுகாக்கப்படுவதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனைகளும் இல்லை. ஆனால் நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? இந்த நாட்டிலே குறிப்பாக வடக்கு கிழக்கிலே எங்கு எங்கு உயர்ந்த மலைகள் இருக்கின்றதோ அங்கெல்லாம் புத்தர் சிலைகளையும் விகாரைகளையும் அமைப்பதற்கு முற்படுகின்றீர்கள். புத்தர் அவ்வாறு சொல்லவில்லை. புத்தர் புனிதமான மனிதர். அவரது மதத்தை சார்ந்த நீங்கள் மிகவும் அடாவடித்தனங்களைச் செய்கின்றீர்கள் என்பதே எங்களது நிலைப்பாடு என்று தெரிவித்தார்.