இரட்டை குடியுரிமையுடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் – பிரதி சபாநாயகர்

இரட்டை குடியுரிமை உடையவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை தொடர்பில் சட்டமாதிபர் உட்பட சட்ட வல்லுநர்களின் ஆலோசனை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருசிலர் இரட்டை குடியுரிமை உடையவர்களை கொண்டுள்ளதாக குறிப்பிடப்படும் செய்தி தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பாராளுமன்ற நடவடிக்கை ஊடாக இரட்டை குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காண முடியாது.குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை உடையவர்களுக்கு அரசியல் பிரவேசத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை உடையவர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆகவே இரட்டை குடியுரிமை உடையவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பார்களாயின் இலங்கை பிரஜை எவரும் அவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம்.

இரட்டை குடியுரிமை உடையவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை தொடர்பில் சட்டமாதிபர் மற்றும் சட்ட வல்லுநர்களின் ஆலோசனை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இரட்டை குடியுரிமை கொண்டுள்ளதாக பொது இடங்களில் குறிப்பிடுபவர்கள்,பொறுப்புடன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட தகவல்களை பாராளுமன்றத்தின் ஊடாக வெளிப்படுத்த முடியாது என்றார்.