ஒரே சீனக் கொள்கையை இலங்கை எப்போதும் ஏற்றுக் கொள்கின்றது – சபாநாயகர் மஹிந்த யாப்பா

அரசாங்கம் என்ற வகையில் இலங்கை எப்பொழுதும் ஒரே சீனா என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங்கிடம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று வெள்ளிக்கிழமை (19) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவும் கலந்துகொண்டார்.

சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) ஸாவோ லெஜின் புதுவருட வாழ்த்துச் செய்தியை இதன்போது சீனத் தூதுவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்தார்.

இரு தரப்பினருக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் ‘ஒரே சீனா’ என்ற கொள்கை தொடர்பில் இலங்கை வழங்கிவரும் ஆதரவுக்கு சீனத் தூதுவர் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

அரசாங்கம் என்ற வகையில் இலங்கை எப்பொழுதும் ஒரே சீனா கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதன்போது தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர திட்டம் உள்ளிட்ட இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீன முதலீட்டு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இரு தரப்பினருக்குமிடையில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இரட்டை குடியுரிமையுடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் – பிரதி சபாநாயகர்

இரட்டை குடியுரிமை உடையவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை தொடர்பில் சட்டமாதிபர் உட்பட சட்ட வல்லுநர்களின் ஆலோசனை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருசிலர் இரட்டை குடியுரிமை உடையவர்களை கொண்டுள்ளதாக குறிப்பிடப்படும் செய்தி தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பாராளுமன்ற நடவடிக்கை ஊடாக இரட்டை குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காண முடியாது.குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை உடையவர்களுக்கு அரசியல் பிரவேசத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை உடையவர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆகவே இரட்டை குடியுரிமை உடையவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பார்களாயின் இலங்கை பிரஜை எவரும் அவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம்.

இரட்டை குடியுரிமை உடையவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை தொடர்பில் சட்டமாதிபர் மற்றும் சட்ட வல்லுநர்களின் ஆலோசனை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இரட்டை குடியுரிமை கொண்டுள்ளதாக பொது இடங்களில் குறிப்பிடுபவர்கள்,பொறுப்புடன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட தகவல்களை பாராளுமன்றத்தின் ஊடாக வெளிப்படுத்த முடியாது என்றார்.

இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சபாநாயகருடன் சந்திப்பு

இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் எட்வின் ஷார்க், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார். கடந்த வாரம், பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பில், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் கலந்துகொண்டார்.

இரு நாடுகளின், பாராளுமன்ற நட்புறவுச் சங்கங்களின் ஊடாக, இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுக்கு இடையிலான, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக, பாராளுமன்ற தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது