இலங்கை மற்றும் சீனாவிற்கிடையிலான பொருளாதார தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்காக சீன – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சீனாவின் – ஷங்காய் நகரில் வெள்ளிக்கிழமை (04) ஆரம்பமான ஐந்தாவது சீன சர்வதேச ஏற்றுமதி – இறக்குமதி கண்காட்சியின் தொடக்க விழாவில் மெய்ந்நிகர் தொழிநுட்பத்தின் மூலம் காணொளியூடாக உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,
‘ எனது உரையை ஆரம்பிப்பதற்கு முன்னர் சீன கம்யூனிசக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு உங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். சீன சர்வதேச ஏற்றுமதி – இறக்குமதி கண்காட்சி கடந்த 2017 ஆம் ஆண்டு ‘ஒரு பாதை – ஒரு மண்டலம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.
அன்றிலிருந்து இன்று வரை இந்த கண்காட்சி வர்த்தக பன்முகப்படுத்தலிலும் மற்றும் உலகலாவிய ரீதியில் பொருளாதாரத்தை பலப்படுத்துவதிலும் முக்கிய பங்கினை வகிக்கிறது. இக்கண்காட்சி அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் சீன வர்த்தக சந்தைக்குள் நுழைவதற்கு முன்னெடுக்கும் முயற்சியின் ஆரம்பமாக அமையும். இதற்காக சீன ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஆரம்பத்திலிருந்தே சீனா இதனுடன் தொடர்பு கொண்டுள்ளது. அது எமது நாட்டின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பிரயோசனமாக அமைந்தது. எமது உணவு உற்பத்திகளை சீன சந்தைக்குள் ஸ்திரப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இதன் மூலம் கிடைக்கப் பெற்றது.
சீனாவுடனான எமது முதலாவது தொடர்பு இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் ஊடாகவே ஆரம்பமானது. அன்று அது மிக முக்கியத்துவம் மிக்க ஒப்பந்தமாக அமைந்தது. இவ்வாண்டுடன் அந்த ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன. இவ்வாறு ஆரம்பமான தொடர்புகள் வர்த்தகம், முதலீடு, கல்வி, சுற்றுலா, பாதுகாப்பு, சுகாதாரம் என பல துறைகளில் விரிவடைந்துள்ளது.
கடந்த ஆண்டு இரு அரசாங்கங்களுக்குமிடையிலான ஒட்டு மொத்த வர்த்தகப் பெறுமதி 3.4 பில்லியன் டொலர்களாகும். சீனாவானது இலங்கையின் பிரதான பொருளாதார மூலமாகும். இந்த தொடர்பினை மேலும் மேம்படுத்த வாய்ப்புள்ளது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் விரைவில் அவதானம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.
கொவிட் தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தக் கண்காட்சியை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடிந்தமை தொடர்பில் நான் மீண்டும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.’ என்றார்.